சென்னை: அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீடுகளில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சத்யாவின் கணவர் மற்றும் நகர் மன்ற தலைவர் பன்னீர்செல்வம் வீட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக சோதனை செய்த நிலையில் தற்போது அதிமுகவின் இன்னொரு முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

கள்ளக்குறிச்சியில் உள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ பிரபு வீட்டில் இன்று காலை முதல் திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது.   பிரபு எம்எல்ஏவாக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிந்ததாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது

முன்னாள் அதிமுக எம்எல்ஏ பிரபு வீடு உள்பட மொத்தம் ஒன்பது இடங்களில் சோதனை நடந்து வருவதாகவும் சோதனைக்கு பின்னரே அவரது வீட்டில் இருந்து என்னென்ன பொருட்கள் கைப்பற்றப்பட்டது என்பது குறித்த விவரங்கள் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சிபிஐ ,அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரு பக்கம் எதிர்க்கட்சியினர் வீடுகளில் சோதனை செய்து வரும் நிலையில் தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதே போல் முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் வீடுகளில் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையால் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,   கள்ளக்குறிச்சி தொகுதி கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபு மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் எண்ணத்தோடு லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவிவிட்டு சோதனை மேற்கொண்டிருக்கும் விடியா திமுக அரசின் இச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.