திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்களுக்குச் சொர்க்க வாசலைத் திறக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இன்று திருப்பதி திருமலை அன்னமையா பவனத்தில் அறங்காவலர் குழு கூட்டத்தில் சில முக்கிய முடிவுகளும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.  கூட்டம் முடிந்த பிறகு அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பாரெட்டி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசி உள்ளார்.

அப்போது அவர், “வழக்கமாகத் திருமலையில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி நேரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே சொர்க்க வாசல் திறந்து வைக்கப்படும்.   இந்த வருடம் பக்தர்கள் வேண்டுகோளுக்கு இணங்க 10 நாட்களுக்குச் சொர்க்க வாசலைத் திறந்து வைக்க முடிவு செய்துள்ளோம்.

இந்த 10 நாட்களிலும் சொர்க்க வாசல் வழியாகச் சென்று வரப் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.  குறிப்பாக எஸ் சி, எஸ்டி, பிசி, மீனவப் பிரிவு ஆகிய சமூகங்களைச் சேர்ந்தோருக்கு இலவசமாக வகுந்த தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.