சென்னை

செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களின் உள்பகுதிகளில் வடகிழக்கு பருவமழை மிகத் தீவிரம் அடைந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தென்மாவட்டங்களின் உள் பகுதிகளில் அனேக இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், வட மாவட்டங்களின் உள் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று தமிழகத்தில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

இன்று மிகக் கனமழை பெய்யக்கூடிய செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களுக்கு நிர்வாக ரீதியாக வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளையும், நாளை மறுதினமும் தென் மாவட்டங்களில் சில இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழையும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

நாளை மறுநாள் 10-ந்தேதிக்குப்  பிறகு மழைக்கான வாய்ப்பு அப்படியே குறையத் தொடங்குவதால், வடகிழக்கு பருவமழை அதனுடன் நிறைவு பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.