காவிரி நீர் வரத்து : மேட்டூர் அணை நீர் மட்டம் 67 அடியை எட்டியது

Must read

மேட்டூர்

னமழை காரணமாக காவிரி ஆற்று நீரைக் கர்நாடகா திறந்துள்ளதால் மேட்டூர் அணை நீர் மட்டம் 67 அடியை எட்டி உள்ளது.

கர்நாடகா, கேரளா மாநிலங்களில் தற்போது கன மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி நீர் அதிகரித்து கபினி அணை நிரம்பி வருகிறது. கிருஷ்ண ராஜ சாகர்  அணையிலும் நீர் வரத்து அதிகமாகி உள்ளது. எனவே இவ்விரு அணைகளின் பாதுகாப்பு கருதி கர்நாடக அரசு காவிரி ஆற்றில் வரும் நீரைத் திறந்து விட்டுள்ளது. இவ்வாறு 1.20 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் மாலை ஒகேனக்கல்லில் 40 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து நேற்று காலை 80000 கன அடியாக உயர்ந்து மதியம் 90000 கன அடியாக அதிகரித்தது. வெள்ளம் காரணமாக ஒகேனக்கல்லில் பரிசல் போக்குவரத்து தடை  செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கரையோர பகுதிகளில் காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேட்டூர் அணைக்குக் காவிரி நீர் வரத்து நேற்று இரவு 8 மணிக்கு 82 ஆயிரம் கன அடியாக உள்ளது. இதனால் அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் அதிகரித்துள்ளது. தற்போது அணையின் நீர் மட்டம் 66.88 அடியாக உள்ளது. காவிரி நீர் வரத்து இதே நிலையில் இருந்தால் அணையின் முழுக் கொள்ளளவை இன்னும் 10 நாட்களில் எட்டி  விடும் என கூறப்படுகிறது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

இவ்வாறு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து  வருவதால் செட்டிப்பட்டி, கோட்டையோர், பண்ணவாடி பரிசல் துறைகளில் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் கொளத்தூர், மேட்டூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தர்மபுரி மாவட்டம் நெருப்பூர், நாகமரை, ஒட்டனூர் பகுதிகளுக்குச் செல்லும் பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரும் இதனால் கடும் பாதிப்புக்கு ஆளானார்கள். தண்டோரா போட்டு காவிரி கரையோர கிராம மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

More articles

Latest article