சென்னை

சென்னைக்கு வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்  ஷாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துள்ளார்.

 

வெங்கையா நாயுடு கடந்த இரு வருடங்களாகத் துணை ஜனாதிபதி பதவி வகித்து வருகிறார். அத்துடன் அவர் மாநிலங்களவை தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். அவரது பணிகளைப் பலரும் பாராட்டி வருகின்றனர் வெங்கையா நாயுடு எழுதிய Listening, Learning and Leading என்னும் ஆங்கில புத்தக வெளியீட்டு விழா இன்று காலை  சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது.

இந்த புத்தகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட உள்ளார். இந்த விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர், துணை முதல்வர்,  வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன், உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்துக் கொள்கின்றனர். இந்த விழாவில் கலந்துகொள்ள நேற்று அமித்ஷா மற்றும் வெங்கையா நாயுடு ஆகியோர் சென்னை வந்துள்ளனர்.

அவர்கள் இருவரும் தற்போது ஆளுநர் மாளிகையில் தங்கி உள்ளனர். நேற்று இரவு  உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு எனக் கூறப்பட்டுள்ளது. அமித் ஷாவின் வருகையையொட்டி நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.