2022 அக்டோபர் மாதம் காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் மெய்டன் பார்மசியூட்டிகள் என்ற இந்திய நிறுவனம் தயாரித்து வழங்கிய நான்கு விதமான இருமல் மருந்து தான் காரணம் என்று உலக சுகாதார அமைப்பு குற்றம்சாட்டி இருந்தது.

உலக சுகாதார அமைப்பின் இந்த அறிவிப்பை அடுத்து மெய்டன் பார்மசியூட்டிகள் நிறுவனத்தை மூடி சீல் வைத்த மத்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அந்நிறுவனத்தை உற்பத்தியை நிறுத்தி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

 

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஆய்வுக் குழு ஒன்றையும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் நியமித்தது.

அதேவேளையில், காம்பியாவில் குழந்தைகள் இறப்பதற்கு இந்திய இருமல் மருந்து தான் காரணம் என்று உலக சுகாதார அமைப்பு கூறியதை அடுத்து இதுகுறித்த ஆதாரங்களை வழங்குமாறு உலக சுகாதார அமைப்பிடம் இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் கேட்டிருந்தது.

இதுவரை எந்த ஒரு விளக்கமும் அளிக்காத உலக சுகாதார அமைப்பு இது தொடர்பான ஆதாரங்களை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் குழு மெய்டன் பார்மசியூட்டிகள் நிறுவனத்தில் மேற்கொண்ட சோதனையில் காம்பியா-வுக்கு அனுப்பிய மருந்துகளின் பேட்ச் கண்ட்ரோல் மாதிரிகளையும் (Batch Control Samples) தயாரிக்க பயன்படுத்திய மருந்து மூலப் பொருட்களின் மாதிரிகளையும் ஆய்வு செய்தனர்.

தென் கொரியாவில் இருந்து டெல்லியில் உள்ள மருந்து மூலபொருள் இறக்குமதி நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட இந்த மாதிரிகளில் எந்தவிதமான மாசுபடுதலோ, கெட்டுப்போனதாகவோ அதிகாரிகள் உறுதிப்படுத்த வில்லை.

காம்பியா-வுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இருமல் மருந்தின் மாதிரியில் எந்தவிதமான தவறும் இல்லை என்ற நிலையில் உலக சுகாதார அமைப்புக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தங்களின் சோதனை முடிவுகளை அனுப்பியுள்ளது.

மேலும், உலக சுகாதார அமைப்பு இந்த விவகாரத்தில் அவசரப்பட்டு முடிவு எடுத்துள்ளதாகவும் இந்திய நிறுவனத்தை ஆய்வு செய்ய நினைத்தால் அவர்கள் எந்த நேரத்திலும் ஆய்வு செய்துகொள்ளலாம் என்றும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளது.