தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஏ.ஆர். முருகதாஸை நேற்று நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன் தனது அடுத்த படமான #SK23யை முருகதாஸ் இயக்கப்போவதாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

‛‛எனது 23வது படத்திற்காக உங்களுடன் இணைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த படம் எனக்கு எல்லா அம்சங்களிலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். உங்கள் கதையைக் கேட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன் #SK23 படப்பிடிப்பு துவங்கும் வரை என்னால் காத்திருக்க முடியவில்லை.

விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என்று நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். மிக்க நன்றி சார், மீண்டும் ஒருமுறை இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சார்,” என்று அதில் பதிவிட்டுள்ளார்.

தீனா தொடங்கி தர்பார் வரை ரஜினிகாந்த், விஜயகாந்த், அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களை வைத்து பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார் ஏ.ஆர். முருகதாஸ்.

நடிகர் விஜய்-யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் என மூன்று படங்களை இயக்கிய அவர் தனது அடுத்த படத்திற்காக விஜயுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், சிவகார்த்திகேயனை வைத்து ஏற்கனவே மான்கராத்தே படத்தை தயாரித்த ஏ.ஆர். முருகதாஸ் தற்போது அவரை இயக்க இருப்பது குறித்த தகவல் வெளியாகி இருப்பதை அடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.