பாஸ் கேட்டு நச்சரிப்பு அதிகமானதாலும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் லியோ படத்தின் இசைவெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக வெளியான அறிவிப்பு விஜய்-யின் குட்டி கதையை கேட்க ஆவலாக இருந்த அவரது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த மாதம் 30 ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுவதாக இருந்தது.

இந்த நிலையில், இந்த நிகழ்ச்சிக்கான ‘பாஸ்’கள் கேட்டு முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகளவு கோரிக்கைகள் வருவதாகவும் அதிலும் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடம் பாதுகாப்பானதாக இல்லை என்றும் தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

மேலும், இதில் அரசியல் தலையீடு ஏதும் இல்லை என்றும் பின்குறிப்பிட்டுள்ளது.

7 ஸ்க்ரீன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார் த்ரிஷா, சஞ்ஜய் தத், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான்,மேத்தியு தாமஸ்,ஜோஜூ ஜார்ஜ், மடோனா செபாஸ்டியன், அனுராஜ் காஷ்யப், இயக்குநர்கள் கெளதம் மேனன், மிஷ்கின், ஜவஹர் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

அக்டோபர் 19 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த படத்தின் ப்ரோமோ வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியானது.

சமீப ஆண்டுகளாக தனது படத்தின் இசை வெளியீட்டு விழாக்களில் குட்டி கதைகளை சொல்லி தனது ரசிகர்களை உற்சாகப் படுத்திவரும் நடிகர் விஜய் இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது கதை சொல்வார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

இந்த நிலையில், அதிகளவு பாஸ் கோரிக்கை காரணமாகவும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.