கொரோனா விவரங்களை மூடி மறைக்காதீர்கள்; உண்மையை தெரிவியுங்கள்! மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை…

Must read

சென்னை,  கொரோனா விவரங்களை மூடி மறைக்காதீர்கள்,  வெளிப்படையாக செயல்படுங்கள். மக்களை காப்பாற்றுவோம் என  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்துரையாடிய முதல்வர் அறிவுரை  கூறினார்.

தமிழக முதல்வராக நேற்று பதவி ஏற்ற முதல்வர் ஸ்டாலின், நேற்று மாலை கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், உயிரிழப்புகளை குறைப்பது பற்றியும், அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சை வசதிகள் தங்கு, தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.  இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கே.ஆர்.பெரியகருப்பன், மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, போலீஸ் டி.ஜி.பி. ஜெ.கே.திரிபாதி மற்றும் அரசு துறை செயலாளர்கள், உயர் அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்தகூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,  நாடு முழுவதும கொரோனா 2-வது அலை தீவிரமடைந்து உள்ளது.  தமிழகத்திலும் இக்கட்டான சூழல் நிலவி வருகிறது. புதிதாக பொறுப்பேற்ற உடனேயே இந்த மாபெரும் சவாலை சமாளித்து, தமிழக மக்களின் உயிரையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் பெரும் கடமை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், நோய்க்கட்டுப்பாடு நடவடிக்கைகள், மருத்துவ கட்டமைப்பு நடவடிக்கைகளை உடனடியாக போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும். இதற்கு அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டமு.

இந்த கடமையை நிறைவேற்றும் அதிகாரிகள், மக்களின் உயிர்காக்கும் உன்னத பணிகளில் அரசுடன் தோளோடு தோள் நிற்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. தமிழகம் தடுப்பூசி போடுவது தொடர்பான குறியீட்டில் தேசிய அளவில் முதலிடம் பெற மக்களுடன் சேர்ந்து பணியாற்றவேண்டும். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

சென்னை, செங்கல்பட்டு, கோவை, மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் தொற்றின் அளவு கூடுதலாக உள்ளது. இந்த பகுதிகளில் தொற்று கட்டுப்படுத்தப்பட்டால் மட்டுமே மாநிலத்தில் நோயின் தாக்கமும், இறப்பு எண்ணிக்கையையும் குறையும். இந்த பகுதிகளில் பணியாற்றும் அலுவலர்கள் நோயை கட்டுப்படுத்தவும், மருத்துவ கட்டமைப்பிலும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.

கொரோனா பாதிப்பு, நிலவரம் குறித்த தகவல்களை  அதிகாரிகள் உள்ளதை உள்ளபடியே முன்வைத்து, வெளிப்படையாக செயல்படுங்கள்.  கடக்கவேண்டிய தூரத்தை, ஒளிவு மறைவின்றி எடுத்துரைக்கவேண்டும். கொரோனா விவரங்களை மூடி மறைக்காதீர்கள்,  புகழுரையோ, பொய்யுரையோ எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை. உள்ள உண்மையை நாம் நேருக்கு நேர் சந்திப்போம்.  மக்களை காப்பாற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

More articles

Latest article