நாளொன்றுக்கு 8500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படும் நிலையில் தினசரி 9000 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. உபரியாகவே உற்பத்தி செய்யப்படும் நிலையில், திரவ ஆக்சிஜனை கொண்டு செல்ல தேவையான க்ரையோஜெனிக் டேங்கர் லாரிகள் போதுமான அளவுக்கு இல்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

90 டிகிரி செல்சியஸ்-க்கும் குறைவான கொதிநிலை உள்ள திரவம் க்ரையோஜெனிக் திரவம் என்று அழைக்கப்படுகிறது. இந்த க்ரையோஜெனிக் திரவத்தை அதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கலன்களில் மட்டுமே கொண்டு செல்ல முடியும்.

கொரோனா பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன் நாடு முழுவதும் நாளொன்றுக்கு 850 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் தேவை என்று இருந்த நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்டவுடன் 2020 ஏப்ரல் மாத மத்தியில் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்து தினசரி 3100 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்பட்டது, தற்போது 2021 ஏப்ரல் மாதத்தில் இந்த தேவை மேலும் அதிகரித்து நாளொன்றுக்கு 4300 மெட்ரிக் டன் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

இந்த தேவை, மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் மாநிலங்களான டெல்லி, கர்நாடக, தமிழ்நாடு, உத்தர பிரதேஷ் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்கள் தெரிவித்துள்ளன, இவை தவிர மருத்துவ உள்கட்டமைப்பை திறம்பட நிர்வகிக்கும் மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களும் வரும் வாரங்களில் தங்கள் மாநிலத்திற்கான ஆக்சிஜன் தேவை 10 சதவீதம் உயர வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.

மேலும், இதுவரை கொரோனாவால் அதிகம் பாதிப்பு ஏற்படாத மாநிலங்களான உத்தரகண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை ஏற்படுவதற்கு முன், ஆக்சிஜன் ஏற்றி செல்ல தேவையான க்ரையோஜெனிக் டேங்கர் லாரிகளின் எண்ணிக்கை 1200 ஆக இருந்தது, 2020 ஆகஸ்ட் மாதத்தில், திரவ நைட்ரஜன் மற்றும் ஆர்கன் ஆகியவற்றை ஏற்றி செல்லும் டேங்கர் லாரிகளையும் ஆக்சிஜன் ஏற்றி செல்ல தேவையான விதத்தில் மாற்றியமைக்க அரசு அனுமதியளித்தது.

இதனை அடுத்து, தற்போது 1600 டேங்கர் லாரிகள் இருப்பதாக பெட்ரோலிய மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு அமைப்பு (Petroleum and Explosives Safety Organisation – PESO) தெரிவித்துள்ளது, ஆனால் 2400 லாரிகள் இருப்பதாக அந்த துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

மணிக்கு 40 கி.மீ. வேகத்திற்கு மேல் இந்த டேங்கர் லாரிகளால் செல்லமுடியாது என்பதால், அவசரம் கருதி மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் செல்லும் ரயில்களில் அனுப்பி வைக்கப்படுகிறது. இதுவரை 34 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் 137 டேங்கர்களில் 2067 மெட்ரிக் டன் எடையுள்ள திரவ ஆக்சிஜனை மகாராஷ்டிரா, உத்தர பிரதேஷ், மத்திய பிரதேஷ் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், ரயில்களில் அனுப்பிவைத்ததன் மூலம், சுமார் 40 மணி நேரம் மிச்சமானதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து விமானம் மூலம் வந்து சேர்ந்த திரவ ஆக்சிஜன் டெல்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டதால் டெல்லியின் ஆக்சிஜன் தேவை சமாளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டிவருவதால், வரும் நாட்களில் ஆக்சிஜன் தேவையும், அதை கொண்டு செல்வதற்கு தேவையான டேங்கர்களின் தேவையும் அதிகரிக்கும் சூழல் உள்ளது, தற்போதுள்ள நிலையில், மேலும் 300 டேங்கர்கள் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதுபோன்ற டேங்கர் லாரிகளை வடிவமைக்க லாரி ஒன்றுக்கு எஞ்சின் நீங்கலாக 35 முதல் 40 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்று ஆக்சிஜன் உற்பத்தி நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாக ‘மணிகண்ட்ரோல்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மூன்றாவது அலை தவிர்க்க முடியாது, அது எப்போது வரும், எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணிக்க முடியாத சூழல் நிலவுவதாக பிரதமரின் அறிவியல் ஆலோசகர் தெரிவித்திருக்கும் நிலையில் நாட்டின் ஆக்சிஜன் தேவையையும் விநயோகத்தையும் சீராக செயல்படுத்துவதற்கான அனைத்து அவசரகால நடவடிக்கையையும் எடுக்கவேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது.