மதுரை, கோவை உள்பட 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை! சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Must read

சென்னை: ரெம்டெசிவர் மருந்து தட்டுப்பாடுகளை போக்க, மதுரை, கோவை உள்பட 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாவும், 15ந்தேதிக்குள் 12,500 ஆக்சிஜன் வசதியுடனான படுக்கை தயாராகி விடும் என்றும் தமிழக  சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை, கொரோனா வார்டில் வழங்கப்படும் சிகிச்சை, ஆக்சிஜன் தட்டுப்பாடு போன்றவை குறித்து, சென்னை  ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (மே 08) ஆய்வு மேற்கொண்டார். அவருடன் வடசென்னையைச் சேர்ந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியளார்களை சந்தித்த  அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் “ரெம்டெசிவிர் மருந்து தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்மட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இதை  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அது பிரித்து விற்கப்பட வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி,   மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களிலும் ரெம்டெசிவிர் மருந்துகளை விற்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர்.

தனியார் மருத்துவமனைகளில் ஏழை, எளிய மக்களுக்கு  முதல்வர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் கொரோனா இலவச சிகிச்சை அளிக்க முதல்வர் அறிவித்துள்ளார். அதற்கான கட்டணம்  குறித்த விளக்கம் மருத்துவத்துறையினரால் இன்று மாலை வெளியிடப்படும்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளுக்காக  மேலும் ஆக்சிஜன் வசதிகள் கொண்ட படுக்கை வசதிகள் தயாராகிக்கொண்டு இருப்பதாகவும், வரும் 15ந்தேதிக்குள் மேலும் 12,500 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கை வசதிகள் அமைக்கப்படும்.

முழு ஊரடங்கின்போது மருத்துவ சேவைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி போடுவதும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் தொடர்ந்து நடைபெறும்.

ஆம்புலன்சில் வரும் நோயாளிகளை விரைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சித்த மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாய்வு நடத்தி, தீவிரமல்லாத நோயாளிகளுக்கு சித்த, ஆயுர்வேத சிகிச்சையை பயன்படுத்திக்கொள்ள முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

இறந்தவர்களை புதைக்கவோ, எரிக்கவோ உறவினர்கள் காத்திருப்பது போன்ற நிலை தமிழகத்தில் வராது அது வட இந்தியாவின் நிலை. அது தமிழகத்தில் நிகழ வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

More articles

Latest article