டொமினிகா

ந்தியாவில் வங்கி மோசடி செய்து தப்பி ஓடிய மெகுல் சோக்சிக்கு டொமினிகா நீதிமன்றம் ஆண்டிகுவா சென்று சிகிச்சை பெற இடைக்கால ஜாமீன் அளித்துள்ளது.

பிரபல இந்திய வைர வியாபாரியான மெகுல் சோக்சி தனது உறவினரான நிரவ் மோடியுடன் இணைந்து வர்த்தகம் செய்து வந்தார்.  இவர் தவறான ஆவணங்களை அளித்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,578 கோடி மோசடி செய்துள்ளார்    இந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவினர் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

மெகுல் சோக்சி தண்டனைக்குப் பயந்து இந்தியாவில் இருந்து தப்பி ஓடி கரிபியன் தீவுகளில் ஒன்றான ஆண்டிகுவாவில் குடியேறி அங்குக் குடியுரிமை பெற்றார்.   இவர் இந்தியாவில் தேடப்பட்டு வரும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இவரை இந்தியாவுக்குக் கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகின்றன. இதையொட்டி மே மாதம் இவர் ஆண்டிகுவாவில் இருந்து கியூபாவுக்கு தப்பி ஓட முயன்றார் .

அந்த நேரத்தில் இவர் டொமினிகா நாட்டில் கைது செய்யப்பட்டார்.  டொமினிகாவில் இருந்து மெகுல் சோக்சியை இந்தியாவுக்கு நாடு கடத்த அரசு முறையிட்டுள்ளது.   தற்போது உடல் நிலை சரியில்லாததால் அவர் டொமினிகா மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகிறார்.  அவர் ஜாமீன் கோரி டொமினிகா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  அதன்படி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மெகுல் சோக்சியின் வழக்கறிஞர், “டொமினிகா நீதிமன்றம் மெகுல் சோக்சிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளது.  மெகுல் சோக்சி ஆண்டிகுவா நாட்டுக்குச் சென்று சிகிச்சை பெறவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.   இது நீதியை நிலை நாட்டும் தீர்ப்பு.   சிகிச்சை முடிந்த பிறகு மீண்டும் டொமினிகா திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.   இதற்காக இந்திய மதிப்பில் ரூ.2.75 லட்சம் செலுத்தப்பட உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.