வாஷிங்டன்

லகப் புகழ் பெற்ற ஓவியரான லியானார்டோ டாவின்சியின் சிறிய ஓவியம் 1.20 கோடி டாலருக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

இத்தாலிய மறுமலர்ச்சி கட்டிடக் கலைஞரான லியானார்டோ டாவின்சி ஒரு புகழ்பெற்ற ஓவியரும் ஆவார்.  இவரது மோனாலிசா, லாஸ்ட் சப்பர் உள்ளிட்ட ஓவியங்கள் உலகப் புகழ் வாய்ந்தவை ஆகும்.   மேலும் இவர் பல இயந்திரங்களை வடிவமைத்துள்ளார்.  இவர் ஓவியக்கலைஞர், தத்துவமேதை, விஞ்ஞானி, பொறியாளர், கடல் ஆராய்ச்சியாளர் என பன்முக வித்தகர் ஆவார்.

இவரது மிகச் சிறிய ஓவியங்களில் ஒன்றான ‘கரடியின் தலை’ என்னும் ஓவியம் மிகவும் புகழ் வாய்ந்ததாகும்.    இவர் இது போல மொத்தம் 8 சிறிய ஓவியங்கள் வரைந்துள்ளார்.   அவை அனைத்தும் தனியாரிடம் உள்ளன.  எனவே இவற்றை எந்த ஒரு அருங்காட்சியகத்திலும் காண முடியாது.   இந்த புகழ்பெற்ற ஓவியத்தை கிறிஸ்டி ஏல நிறுவனம் ஏலம் விட்டது.  அதை 1.20 கோடி டாலர் விலைக்கு ஒருவர் ஏலம் எடுத்துள்ளார்.

இந்த ஓவியத்தின் அளவு 2.7 அங்குலம் நீளமும் 2.7 அங்குலம் அகலமும் கொண்டதாகும்.   இந்த ஓவியம் சில்வர் பாயிண்ட் என்னும் தொழில் நுட்பத்தில் மிக மெல்லிய வெள்ளி இழைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.   இந்த ஓவியத்தை ஏலம் எடுத்தவர் யார் என்பது தெரிய வில்லை.   இது குறித்து கிறிஸ்டி நிறுவனம் தகவல்களை தெரிவிக்க மறுத்துள்ளது.

இதே ஏல நிறுவனம் இந்த ஓவியத்தை இதற்கு முன்பு கடந்த 1860 ஆம் வருடம் ஏலம் விட்டது.   அப்போது இந்த ஓவியம் 3.40 டாலருக்கு எடுக்கப்பட்டது.  அதன் தற்போதைய மதிப்பு வெறும் 428 டாலர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கதாகும்.