டில்லி:

நாட்டில் கனரக வாகனம் ஓட்ட நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதியை நீக்க மத்திய போக்கு வரத்து துறை திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொதுவாக வாகன ஓட்டுநர் உரிமம் பெற 16 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும். 50 சி.சி.க்கு குறைந்த, கியர் இல்லாத வாகனங்கள் ஓட்டுவதற்கு மட்டுமே அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். 50 சி.சி.க்கு அதிகமான மற்றும் நான்கு சக்கர வாகன (எல்.எம்.வி – இலகு ரக வாகனம்) ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும்.

அதுபோல  பேருந்து, லாரி போன்ற கனரக வாகனம் (ஹெச்எம்வி-ஹெவி மோட்டார் வெஹிக்கிள்) ஓட்டுநர் உரிமம் பெற  இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று ஓராண்டு பூர்த்தியடைந்த பின்பே கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற முடியும். இதற்கு 20 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அத்துடன் கல்வித் தகுதி 8-ம் வகுப்பு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால்,  சொந்த பயன்பாட்டுக் காக வாகனம் ஓட்டுபவர், வாகன ஓட்டுநர் உரிமம் பெற கல்வித் தகுதி தேவை இல்லை.

இந்த நிலையில், பேருந்துகள், கனரக சரக்கு வாகனங்களை ஓட்டுவதற்கு கல்வித்தகுதியும் தேவையில்லை என்று மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து ஆய்வு செய்த போக்குவரத்து துறை,  விபத்துகளை ஏற்படுத்துவோர் கல்வியறிவு அற்றவர்கள் என்பதற்கான எந்த உறுதியான ஆதாரமும் இல்லை என  தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து துறையின் இந்த முடிவு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.