சென்னை:

ன்னுடைய அரசியல் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை; எனக்கும் கமலுக்கும் உள்ள நட்பை கெடுத்து விடாதீர்கள் என்று கூறிய ரஜினிகாந்த்,  நதிகளை இணைப்போம் என்ற பாஜகவின் தேர்தல் வாக்குறுதி வரவேற்கத்தக்கது என்று தெரிவித்து உள்ளார்.

அரசியலுக்கு வருவதாக தனது ரசிகர்களை ஏமாற்றி வரும் ரஜினி கடந்த 1996-ம் ஆண்டிலிருந்தே அவ்வப்போது சவுண்டு விட்டு வருகிறார். ஆனால், இதுவரை அவரது அரசியல் அறிவிப்பு… வெறும் அறிவிப்பாக மட்டுமே உள்ளது.

கடந்த ஆண்டு செய்தியாளர்களுடன் பேசும்போது,  தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், போர் வரும் போது களம் காணுவோம் என்றும் அறிவித்தார்.

தற்போது அவர் கூறிய போர் எனப்படும் தேர்தல் வந்துள்ளது. ஆனால், ரஜினிதான் போருக்கு வர பயந்துகொண்டு மறைமுகமாக பாஜகவுக்கு தனது ஆதரவை தெரிவித்து உள்ளார்.

இன்று திடீரென தனது போயஸ்தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி,  பாஜக-வின் தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு பற்றிய வாக்குறுதி  தரப்பட்டுள்ளது. அதை தான் வரவேற்பதாக கூறியவர், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நதி நீர் இணைப்பு திட்டத்தை முதலில் செயல்படுத்த வேண்டும் என கூறினார்..

நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கோரிக்கை, இது தொடர்பாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடனும் நான் பேசியிருக்கிறேன் என்று கூறியவர்,  நாட்டில் நதிகளை இணைத்தால் தண்ணீர் பிரச்னை, வறுமை தீரும் என தெரிவித்த ரஜினி, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதே நதிகள் இணைப்பு குறித்து தாம் வலியுறுத்தியதாகவும், அந்த திட்டத்திற்கு பகீரத்ன யோஜனா என பெயர் வைக்குமாறு அவரிடம் கூறியதாகவும், பகீரத்ன என்றால் சாத்தியமில்லாதது சாத்தியமாகும் என்பது பொருள் என்று விளக்கினார்.

அதைத்தொடர்ந்து, நடைபெற உள்ள மக்களவை தேர்தலில், கமலுக்கு ஆதரவு அளிப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ரஜினி, யாருக்கும் ஆதரவு இல்லை என்ற என்னுடைய தேர்தல் நிலைப்பாட்டிலும், என்னுடைய அரசியல் நிலைப்பாட்டிலும் எந்த மாற்றமும் இல்லை. எனக்கும் கமலுக்கும் உள்ள நட்பை கெடுத்து விடாதீர்கள் என்று செய்தியாளர்களிடம் கெஞ்சினார்.