டெல்லி: டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயம் திறப்பு விழாவில் கலந்துகொள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு நேரில் சென்று அழைப்பு விடுத்தார்.

பாராளுமன்றத்தில் அதிக எம்.பி.க்களை கொண்டுள்ள கட்சிகளுக்கு, டெல்லியில் அலுவலகம் அமைக்க மத்தியஅரசு  இடம் ஒதுக்கி வருகிறது. அதன்படி, திமுகவுக்கு கடந்த 2013ம் ஆண்டு அலுவலகம் அமைக்க டெல்லியில் உள்ள தீன் தயால் உபாத்தியாயா மார்க் பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த இடத்தில் கட்டிடம் கட்டும் பணியை திமுக தலைமை மேற்கொண்டு வந்தது. தற்போது அதற்கான பணிகள் முடிவடைந்து, திறப்பு விழா காண தயாராக உள்ளது. இந்த அலுவலகத்துக்கு அண்ணா அறிவாலயம் என பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 2ந்தேதி டெல்லிக்கு பயணமாகும் திமுக தலைவரும்,  முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் டெல்லி அண்ணா அறிவாலயம் கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்ட திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அண்ணா அறிவாலயம் திறப்பு விழாவில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் ராகுல் காந்திக்கு, திமுக எம்.பி .ஆர் பாலு அவர்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார்.

திமுக கட்சி அலுவலகம் அமைந்துள்ள இடம், டெல்லியில் உள்ள பாஜ க தலைமை அலுவலகம் அருகில் இருப்பது குறிப்பிடத்தக்கது.