சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், விசாரணைக்கு ஆஜரான லஞ்ச ஒழிப்புத் துறை புலன் விசாரணை அதிகாரியிடம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து இருவரையும் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் விடுவித்தது. அதுபோல முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து வேலூர் நீதிமன்றம் அவரை விடுவித்தது. இதேபோல ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கில் இருந்து அவரை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது.

இவற்றை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்படவில்லை. ஆனால், இந்த வழக்குகளை தாமாக முன்வந்து சூமோட்டோவாக மறு ஆய்வுக்கு எடுத்தார் சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி ஆனந்த் வெங்கடேசன்.  இதன் தொடர்ச்சியாக ஓபிஎஸ், வளர்மதி வழக்குகளையும் மறு ஆய்வுக்கு எடுத்தார்.

மறுஆய்வு வழக்குகளை வேறு நீதிபதி விசாரிக்க வேண்டும் என்கிற அமைச்சர்கள் தரப்பு கோரிக்கையை நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் நிராகரித்தார். இதனிடையே நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், உயர் நீதிமன்றக் கிளைக்கு மாற்றலானதால் வழக்கில் சுணக்கம் ஏற்பட்டது. ஜனவரியில் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு திரும்பியதால் விசாரணை மீண்டும் சூடுபிடித்தது.

தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பொன்முடி, ஐ.பெரியசாமி, ஓபிஎஸ் மற்றும் வளர்மதி ஆகியோர் மீதான மறு ஆய்வு வழக்குகளின் இறுதி விசாரணை பிப்ரவரி 5ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவித்தார். ஆனால், இதனை எதிர்த்து அமைச்சர்கள் தரப்பு உச்ச நீதிமன்றம் சென்றது. அதில், மறுஆய்வு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியே முடிவு செய்வார் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், மீண்டும் ஆனந்த் வெங்கடேசனே விசாரிக்க தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து ஐ.பெரியசாமி வழக்கின் மீதான விசாரணை பிப்ரவரி 11 மற்றும் 12 தேதிகளில் நடைபெற்றது.  இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு செல்லாது என்றும் தீர்ப்பளித்தார். மேலும், வழக்கை ஜூலை மாதத்திற்குள் விசாரித்து முடிக்கவும், தினசரி அடிப்படையில் விசாரணை நடத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் மறுஆய்வு வழக்குகளின் இறுதி விசாரணை தேதி அறிவிக்கப்பட்டுள் விசாரணை நடைபெற்று வருகிறது. . அதன்படி, அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு எதிரான வழக்கின் விசாரணை பிப்ரவரி 28, 29ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, விசாரணை நடைபெற்றத.

அதுபோல,  முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழக்கின் விசாரணை மார்ச் 5 மற்றும் 6ஆம் தேதியும், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழக்கின் விசாரணை மார்ச் 7 மற்றும் 8ஆம் தேதியிலும் நடைபெற உள்ளது.

இந்த வழக்குகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தனது வாதங்களை மார்ச் 11ஆம் தேதிக்கு முடிப்பார். அதன்பிறகு இவ்வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், அவரை வழக்கு விசாரணை தேதியை நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் அறிவிக்கவில்லை.

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு மார்ச் 12 முதல் 15 வரை விசாரிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்,  அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது,   தங்கம் தென்னரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ரமேஷ், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் வாதங்களை எடுத்து வைத்தார். அப்போது அவர், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின் பழிவாங்கும் நோக்கில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நியாயமான விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆதாரங்களை புறக்கணித்து விட்டு வழக்கு தொடர்வது எப்படி நியாயமான விசாரணையாக கருத முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.

வழக்குப்பதிவு செய்யும் முன் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்கை பரிசீலித்திருக்க வேண்டும். வழக்கில் முதல் புலன் விசாரணை அதிகாரி சேகரித்த ஆதாரங்களை மாற்றாமல், கூடுதல் ஆதாரங்களை சேர்ப்பது மறு விசாரணை அல்ல, மேல் விசாரணை தான் எனவும், இந்த மேல் விசாரணையும், காவல் கண்காணிப்பாளரின் ஒப்புதலை பெற்றே மேற்கொள்ளப்பட்டது என வாதிட்டார்.

மேல் விசாரணைக்கு பின், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை என வழக்கை முடித்து அறிக்கை தாக்கல் செய்தால், சம்பந்தப்பட்ட நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்கலாம். அதற்கு சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு எந்த தடையும் இல்லை எனக்கூறி வாதத்தை நிறைவு செய்தார்.

பின்னர், நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரி பூமிநாதனை அழைத்து, எத்தனை ஆண்டுகளாக ஊழல் தடுப்பு சட்ட வழக்கு களை விசாரிக்கிறீர்கள் எனக் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஏழு ஆண்டுகளாக ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை புலன் விசாரணை செய்து வருவதாக புலன் விசாரணை அதிகாரி பூமிநாதன் பதிலளித்தார்.

இந்த ஏழு ஆண்டுகளில், வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனுவில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வமான வாதத்தின் அடிப்படையில் மேல் விசாரணை நடத்தியிருக்கிறீர்களா?

2016 ஆம் ஆண்டு விடுவிக்க கோரிய மனு விசாரணைக்கு உகந்ததல்ல என பதில் மனு தாக்கல் செய்யும்போது மேல் விசாரணை நடத்த தோன்றவில்லையா?,

2021ல் திடீரென மேல் விசாரணை செய்ய வேண்டும் என தோன்றியது ஏன்?

என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த புலன் விசாரணை அதிகாரி பூமிநாதன், வழக்கில் இருந்து விடுவிக்க கோரி குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வமான வாதத்தின் அடிப்படையில் மேல்விசாரணை கோரப்பட்டதாக தெரிவித்தார்.

இதே நடைமுறையை சாதாரண வழக்குகளில் பின்பற்றுவீர்களா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் வாதத்துக்காக விசாரணையை மார்ச் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.