சென்னை

திமுக அரசு அதிமுகவுக்கு எதிரான அடக்குமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளை காவல்துறையை வைத்து திமுக அரசு வழக்கு பதிவு செய்வதாக அதிமுக குறை கூறி வருகிறது.   திமுக அரசை இவர்கள் தரக்குறைவாக விமர்சிப்பதாகக் கூறி பல பொய் வழக்கு பதிந்த் சிறையில் அடைப்பதாகவும் அதிமுக தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக ஆட்சியாளர்கள் சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம் என்று பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்தனர் ஆனால் இப்போது திமுக ஆட்சியாளர்களின் சொல் வேறு, செயல் வேறாக உள்ளது.

முன்பு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில், அதிமுக அரசைத் தரக்குறைவாக விமர்சித்ததற்காகப் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்துள்ளார்.

திமுகவைப் பொறுத்தவரை மாற்றாரை எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து விமர்சித்தாலும், அது கருத்துச் சுதந்திரம்,. அதுவே தங்கள் ஆட்சியையும், தங்கள் கட்சியினரையும், சமூக வலைத்தளங்களில் நாகரிகமாக விமர்சித்தாலே, அதனை மாபெரும் குற்றமாகக் கருதி, தனக்குக் கீழ் உள்ள காவல் துறையினரை ஏவி வழக்குத் தொடுப்பது, கட்சியினரை விட்டு மிரட்டுவது போன்ற திமுகவினருக்கே உரித்தான, அடிப்படையான செயல்களைப் பார்க்கும்போது, திமுகவினர் இன்னும் மாறவில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது.

செய்தி தொலைக்காட்சி உட்பட, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுமார் 120 கட்சி உறுப்பினர்களிடம், சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட உங்கள் பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும், இல்லையெனில் உங்கள் மீது வழக்குத் தொடுக்கப்படும் என்று மிரட்டி வருகிறார்கள்.

எங்களைத் தீய சக்திகளிடம் இருந்து காத்து நின்ற எங்கள் தலைவியின் “அஞ்சுவது யாதொன்றுமில்லை – அஞ்ச வருவதுமில்லை” என்னும் வைர வரிகளை நெஞ்சில் ஏந்தி நிற்கும் வீர மறவர்கள் நாங்கள். ஆனால் திமுகவினர் தற்போது ஆட்சி அதிகாரம் கைக்கு வந்துவிட்டது என்று காவல் துறையின் மூலம் அதிமுக கட்சிக்கு எதிரான அடக்கு முறையை, உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் திமுக அரசின் இந்த அடக்குமுறையினையும், பொய் வழக்குகளையும் சட்ட ரீதியாகச் சந்திக்கக்கூடிய வல்லமை அதிமுகவிற்கும், அதன் சட்டப் பிரிவிற்கும் உண்டு என்பதை இந்த ஆட்சியாளர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.