தர்மதுரை திரைப்படத்தில் வாட்ச்வுமனாக நடித்து  அனைவரின் பாராட்டைப்பெற்றவர் திருநங்கை ஜீவா என்கிற ஸ்நேகா.  பத்திரிகையாளர்களை சந்தித்த இவர், “என் சொந்த ஊர் சிவகாசி, என் 13வது வயதில்  நான் திருநங்கை என்பதை உணர்ந்தவுடன் வீட்டை விட்டு வெளியேறினேன்.
சென்னை கோயம்பேட்டில் ஒரு டீ கடையில் வேலை பார்த்தபடியே, . சினிமா வாய்ப்புக்காக சினிமா கம்பெனிகளாக ஸ்டூடியோவாக ஏறி இறங்கினேன். சில இடத்தில் என்னை உள்ளே நுழைய கூட அனுமதிக்கவில்லை. சில கம்பெனிகளில் போட்டோ கேட்பார்கள். எப்படி போட்டோ கொடுப்பது என தெரியாமல் பாஸ்போட் போட்டோக்களை கொடுத்து வந்திருக்கிறேன்.
பிறகு வடபழநியில் ஒரு ஸ்வீட் கடையில் வேலை பாரத்தேன். அதோடு புதியபூமி எனும் நடனப்பள்ளியில் நடனம் கற்றுகொண்டேன். நடனம் என் சிறுவயது கனவு.  மேடை நடன கலைஞராக என் வாழ்க்கை ஆரம்பமானது. அந்த சமயங்களில் பலரின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளானேன்.

ஸ்நேகா... விஜய் சேதுபதியுடன்
ஸ்நேகா… விஜய் சேதுபதியுடன்

ஒப்பனை கலையும் கற்றுக்கொண்டேன்.  பெரும் போராட்டத்திற்கு பிறகு, ஒப்பனை கலைஞராக அங்கீகாரம் பெற்றேன்.  பிரபல நடிகைகள் அனுஷ்கா, ஸ்ரேயா, விசாலினி ஆகியோரிடம் பணிபுரிந்தேன். அப்பொழுது தர்மதுரை படத்திற்கு விசாலினிக்கு ஒப்பனைகலைஞராக பணியாற்ற சென்றிருந்தேன்.
அப்போது நான் எதிர்பாராத வகையில், இயக்குனர் திரு.சீனுராமசாமி அவர்கள் என்னை  நடிக்க வைத்தார்.  என் அண்ணணாகவே மாறி திரு.விஜய்சேதுபதி  என்னை ஊக்கப்படுத்தினார்.
இப்போது  படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த தீபாவளியோடு  என் பெற்றோர்களை பிரிந்து 10 வருடங்கள் ஆகின்றன.  ஊரில் படம் பார்த்துவிட்டு என் பெற்றோர்,அண்ணன் எல்லோரும் என்னை அழைத்து பேசினர்கள். எனக்கு பேச முடியாத அளவுக்கு அழுகை வந்து விட்டது.
சீனுராமசாமி
சீனுராமசாமி

தர்மதுரை படத்தில் நடித்ததால் என் குடும்பத்தினருடன் சேர்ந்தேன். இப்போது மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் சில படங்களில்  நடித்து வருகிறேன். என்னை திரையுலகில் அறிமுகப்படுத்தி இப்படியொரு கௌரவமான பாத்திரத்தில் நடிக்க வைத்த அண்ணன் இயக்குனர் திரு.சீனுராமசாமி அவர்களுக்கு  எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை” என்று நெகிழ்வுடன் சொன்னார் திருநங்கை ஸ்நேகா.