“தயாரிப்பாளர் சங்கத்தில் எதுவும் நடப்பதில்லை. சும்மா பஜ்ஜி, போண்டா சாப்பிட்டுவிட்டு பஞ்சாயத்து செய்வதுதான் நடக்கிறது” என்று வெடி வைத்தார் விஷால்.  இதற்கு தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு கடுமையான கண்டனம் தெரிவித்தார்.  அதோடு, “ஒரு வாரத்திற்குள் விஷால் மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லாவிட்டால் அவர் தற்போது நடித்துவரும் கத்தி சண்டை படத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் படங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம்” என்றது தயாரிப்பாளர் சங்கம்.
இதனால் விஷாலுக்கு கத்திச்சண்டைக்கு பிறகு படம் கிடைக்குமா என்ற நிலை. ஆகவே எப்படியும் விஷால் மன்னிப்பு கேட்டுவிடுவார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அவரோ,  “முதலில் அவங்க எழுத்துபூர்வமா எனக்கு நோட்டீஸ் அனுப்பட்டும். அதுக்கு பிறகு நான் பதில் அனுப்புறேன்” என்றார். பிறகு, இன்னும் தனக்கு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.

விஷால் - தாணு
விஷால் – தாணு

ஆனால் விஷாலுக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பிவிட்டது. தயாரிப்பாளர்கள் சார்பில், “நடிகர் சங்க  செயலாளராக இருக்கும் விஷால், அவரது சங்க நடவடிக்கைகளை உறுப்பினராக இருக்கும் நடிகர்கள் கேள்வி கேட்டால் உடனே ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்புகிறார். கேள்விகேட்கும் நடிகர்களை “சங்க நிர்வாகத்துக்கு களங்கம் விளைவிக்கிறார். அவர்களை கைது செய்யுங்கள்” என்று காவல்துறையை நாடுகிறார்.
ஆனால் அவர் உறுப்பினராக இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம் பற்றி மீடியாவில் மோசமாக விமர்சிக்கிறார். இது எப்படி நியாயமாகும்? விஷால் மட்டுமல்ல.. அவரது தந்தையும் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்தான். அவர்களுக்கு சங்க நடைமுறை தெரியாதா.
ஆகவே பொது வெளியில் தயாரிப்பாளர் சங்கத்தை விமர்சித்ததற்கு விஷால் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும். இல்லாவிட்டால், அவரது படத்துக்கு தயாரிப்பாளர் சங்கம் ஒத்துழைப்பு அளிக்காது!” என்கிறார்கள் உறுதியான குரலில்.
விஷால் என்ன செய்யப்போகிறார்?