சேலம்:

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் தமிழகத்தில் சூடுபிடித்துள்ள  நிலையில், சேலம் அருகே உள்ள ஒரு கிராமத்தினர், தங்கள் ஊருக்குள்  வாக்கு கேட்டு யாரும் நுழையக்கூடாது என  எதிர்ப்பு தெரிவித்து பேனர் வைத்துள்ளனர். இது பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம்  தர்மபுரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரங்கனூர் ஊராட்சி பகுதியில்  ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்துக்கு அடிப்படை வசதிகள்கூட கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

கடந்த தேர்தலின்போது அரசியல் கட்சிகள் வாக்குகள் கேட்க வரும்போது பல்வேறு வாக்குறுதிகள் கொடுத்து, வாக்குகளை வாங்கி வெற்றி பெற்ற நிலையில், இதுவரை அந்த கிராம மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்று குற்றம் சாட்டி வருகின்றனர். அடிப்படை வசதிகள் இன்றி அப்பகுதி மக்கள் தவித்து வருவதாக தெரிவித்துள்ளளனர்.

இதன் காரணமாக, எந்தவொரு அரசியல் கட்சி வாக்கு சேகரிக்க ஊருக்குள் வரக்கூடாது எனவும், மீறி உள்ளே நுழைந்தால் உரிய மரியாதை அளிக்கப்படாது எனவும் எச்சரித்து பேனர் வைத்துள்ளனர்.

இது எச்சரிக்கை அல்ல… பொதுமக்களின் கட்டளை என்று அந்த பேனரில் எழுதப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி பாராளுமன்ற தொகுதியில், அதிமுக கூட்டணி சார்பாக பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.