பம்பை:

ன்று அதிகாலை சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் 2 பெண்கள் நுழைந்தது நாடு முழு வதும் அய்யப்ப பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வயதை சரிபார்ப்பது காவல்துறை வேலை கிடையாது என்று கேரள டிஜிபி போலோ நாத் கூறி உள்ளார்.

கேரள டிஜிபி போலோநாத்

உச்சநீதி மன்றம் தீர்ப்பை தொடர்ந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் செல்ல இளம்பெண் பலர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களை அய்யப்ப பக்தர்கள் கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கேரள மாநில அரசு மற்றும் காவல்துறை பாதுகாப்புடன்   50வயதுக்கு குறைவான கேரளாவின் கோலியான்டி பகுதியை சேர்ந்த பிந்து (வயது 42) மற்றும் மலப்புரம் மாவட்டம் அங்காடிபுரத்தை சேர்ந்த  கனகதுர்கா (வயது 44) ஆகிய இரு  பெண்கள் மப்டி போலீசார் பாதுகாப்புடன்  சபரிமலை கோவிலுக்குள் அதிகாலை 3.30 மணி அளவில் சன்னிதானத்திற்குள் பக்தர்களின் எதிர்ப்பையும் மீறிச் சென்று சாமி தரிசனம் செய்து  வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

இது கேரளாவில் மீண்டும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ள நிலையில், செய்தியாளர்களை சந்தித்தார் கேரள மாநில டிஜிபி போலாநாத். அவரிடம் செய்தியாளர்கள் சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைந்தது குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த போலோநாத்,  பக்தர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதுதான் காவல் துறையினரின் வேலை என்றும், சபரிமலைக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வயது மற்றும் பிற விவரங்களை சரிபார்ப்பது எங்கள் கடமையல்ல  என்றும் கூறினார்.

சபரிமலை விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.