சென்னை:

தமிழக கல்வி துறையும், இந்திய தொழிற் கூட்டமைப்பும் (சிஐஐ) இணைந்து கூட்டு இலக்கு படையை உருவாக்கியுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் பள்ளி கல்வி திட்டத்தை மேம்படுத்தும் வகையில் இந்த படை செயல்படவுள்ளது. பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளர் தலைமையிலும், சிஐஐ தமிழ்நாடு மாநில குழு தலைவர் இணைத் தலைவராகவும் இணைந்து செயல்படுகின்றனர். இதன் முதல் கூட்டம் கடந்த 31ம் தேதி நடந்தது.

இது குறித்து சிஐஐ தலைவர் ரவிச்சந்திரன் கூறுகையில், ‘‘நமது கல்வி முறைக்கு நிறைய தேவை இருக்கிறது. இது தற்போதும் காலனித்துவமாக தான் உள்ளது. இந்த கூட்டு இலக்கு படை அமைக்கும் ஆலோசனை கோவையில் நடந்த ஒரு கருத்தரங்கில் ஏற்பட்டது. இந்த திட்டத்துக்கு அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகள் அனுமதி வழங்கினர். கார்பரேட் நிறுவனங்கள் மீது சமுதாய பொறுப்பு நிதியை செலவு செய்ய வேண்டும்.

ஆனால் அரசு பள்ளிகளை நேரடியாக தொடர்பு கொண்டு செலவு சிக்கல் இருக்கிறது. தொழிந் நிறுவனங்கள் நேரடியாக பள்ளி கல்விக்கு உதவ அனுமதிக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இது வரை இல்லை. தற்போது தொழில் நிறுவனங்கள் எந்தெந்த அரசுப் பள்ளிக்கு உதவி செய்ய வேண்டும் என்று திட்டம் தயார் செய்யப்பட்டு வருகிறது. ’’ என்றார்.

இது குறித்து பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளர் பிரதீப யாதவ் கூறுகையில், ‘‘இந்த திட்டம் செயல்படுத்த சிஐஐ.யுடன் இணைந்து வழிகாட்டு நெறிமுறைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இது ஒரு மாதத்திற்குள் வெளியிடப்ப்படும். இது தான் கூட்டு இலக்கு படையின் முதல் இலக்கு. சிஐஐ.யுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் பள்ளி கல்வி துறையில் தரம் மேம்படும். தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் பள்ளிகள் கொண்ட பட்டியல் இறுதி செய்யப்பட்டு சிஐஐ வசம் ஒப்படைக்கப்படும். பட்டியல் தயாரிக்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது’’ என்றார்.

ரவிச்சந்திரன் தொடர்ந்து கூறுகையில், ‘‘மாநிலம் முழுவதும் உள்ள எங்களது அலுவலகங்கள் பட்டியல் தொழில் நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் சார்ந்த மாவட்டத்திலேயே பள்ளிகளை தேர்வு செய்து பணியாற்ற ஏற்பாடு செய்யப்படும். மொத்தம் ஆயிரத்து 300 நிறுவன உறுப்பினர்கள் எங்களிடம் உள்ளனர்.

இதில் சிலவை பெரிய கார்பரேட் நிறுவனங்களாகும். இதன் ஆண்டு வர்த்தகம் ரூ.100 கோடி வரை இருக்கும். அவர்கள் நகருக்குள் இருக்கும் பள்ளிகளில் பணியாற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். தொழில் நிறுவன ஊழியர்களுடன் ஆசிரியர்கள் கலந்துரையாடல் நடத்தும் திட்டமும் உள்ளது’’ என்றார்.