புதுடெல்லி: யோகேஷ் தாகத் என்ற 28 வயது நர்சிங் அதிகாரி, கடந்த 45 நாட்களில் மொத்தம் 3 முறை பிளாஸ்மா தானம் செய்திருக்கிறார். தனது செயல்பாட்டின் மூலமாக, கொரோனா நோயாளிகளிடையே இவர் நம்பிக்கையை விதைக்கிறார்.
டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில், குழந்தை அறுவை சிகிச்சைத் துறையில் இவர் நர்சிங் அதிகாரியாகப் பணியாற்றுகிறார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து சஃப்தர்ஜங் மருத்துவமனையில் 21 நாள் தனிமைப்படுத்தலில் இருந்தார்.
அவர் கூறியதாவது, “எனது உடல் ஆன்டிபாடிக்களை தொடர்ச்சியாக உற்பத்தி செய்வதால், கடந்த 45 நாட்களில் ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒருமுறை நான் பிளாஸ்மா நன்கொடை அளித்து வருகிறேன். நான் நோயாளிகளை டீல் செய்த விஷயத்தில் சற்று கவனக்குறைவாக இருந்திருக்கலாம்.
ஒரு சமூக சேவகர் என்னைத் தொடர்புகொண்டு, இரண்டு கொரோனா நோயாளிகளுக்காக பிளாஸ்மா தானம் தரமுடியுமா? என்று கேட்டார். கடந்த 2014ம் ஆண்டு முதல் நான் இதுவரை மொத்தம் 12 முறை இரத்ததானம் செய்திருக்கிறேன்.
பிளாஸ்மா தானம் செய்வது ஒரு பாதுகாப்பான செயல்முறையாகும். இந்த தானத்தைப் பெற்றவர்களில் 96% நோயாளிகள் இதுவரை எந்த எதிர்மறை பாதிப்புகளையும் வெளிப்படுத்தவில்லை. சிலருக்கு தலைசுற்றல் அல்லது குமட்டல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டாலும், இது தற்காலிக தாக்கமே” என்றார்.
கொரோனாவிலிருந்து மீண்டு, தொடர்ச்சியாக தானம் செய்து வருவதன் மூலமாக இவர், இதர நோயாளிகளிடையே நம்பிக்கையை விதைத்துள்ளார். அதேசமயம், கொரோனாவிலிருந்து மீண்ட அனைவருமே பிளாஸ்மா தானம் செய்ய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.