பணத்தைப் பறித்து விட்டு தாயை ரோட்டில் வீசிச்சென்ற ‘தங்க மகன்’..

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள கிராமத்தில் பிச்சை எடுத்துப் பிழைத்து வந்த 80 வயது கிருஷ்ணம்மாவின் வாழ்க்கை, கண்ணீரால் எழுதப்பட வேண்டிய சோகக்கதை.

அவருக்கு இரு மகன்கள். இரு மகள்கள்.

சோறு போட நால்வருமே தயாராக இல்லாததால், வீதிக்கு வந்து, அந்த தாய் பிச்சை எடுக்க நேர்ந்தது.

பிச்சை எடுத்த பணத்தில் அவர், தனது இறுதி பயண செலவுக்காக 20 ஆயிரம் ரூபாய் சேமித்து வைத்திருந்தார்.

நான்கு நாட்களுக்கு முன்னர் கிருஷ்ணம்மாவுக்கு  மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், ஐதராபாத்தின் புறநகரில் நாச்சரம் என்ற இடத்தில் வசிக்கும் தன் மகன் வீட்டுக்கு வந்துள்ளார்.

தன்னிடம் இருந்த 20 ஆயிரம் ரூபாயை மகனிடம் கொடுத்து, தன்னை மருத்துவமனையில் சேர்க்குமாறு கூறியுள்ளார்.

பணத்தை வாங்கி பத்திரப்படுத்திக்கொண்ட பாச மகன், ஒரு ஆட்டோவில் அம்மாவை ஏற்றிச்சென்றுள்ளான்.

’’ ஆஸ்பத்திரியில் சேர்த்தால் 20 ஆயிரம் ரூபாயை டாக்டர்கள் பிடுங்கி விடுவார்கள். 80 வயதுக்கு மேல் இவள் ஏன் வாழ வேண்டும்’’ என நினைத்த அந்த ’தங்கமகன்’’ மனமும். பாதையும் மாறினார்.

 போங்கிர் என்ற இடத்தில் ஆட்டோவில் இருந்து தாயை இறக்கி ரோட்டோரத்தில் போட்டு விட்டு, அதே ஆட்டோவில் வீட்டுக்கு போய் விட்டார்.

இரு நாட்களாக ரோட்டோரத்தில் சடலம் போல், கேட்பாரற்று கிடந்த கிருஷ்ணம்மாவை போலீசார் மீட்டு, ஐதராபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அந்த தாய், ரோட்டோரத்தில் வாடி வதங்கி தவிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பொதுமக்களை ‘உச்’ கொட்ட வைத்துள்ளது.

தாயிடம் இருந்து பணத்தைப் பறித்த மகனை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து ‘டோஸ்’ விட்டுள்ளனர், காவலர்கள்.

-பா.பாரதி.