கொரோனா பாதித்த பத்திரிகையாளர் தற்கொலையில் மர்மம்…

டெல்லியில் உள்ள இந்தி நாளிதழில் செய்தியாளராக பணியாற்றி வந்தவர் தருண் சிசோடியா.

அங்குள்ள பஜன்புரா பகுதியில் வசித்து வந்த தருண், கொரோனா தொற்று இருந்ததால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 24 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

உடல் நிலை தேறி வந்த அவரை பொது வார்டுக்கு மாற்ற டாக்டர்கள் திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று பிற்பகல் அவர், திடீரென படுக்கையில் இருந்து எழுந்து  மருத்துவமனையின் நான்காம் மாடியை நோக்கி ஓடியுள்ளார்.

அந்த வார்டில் பணியாற்றும் ஊழியர்கள் , பதறிய படி, அவரை விரட்டி சென்றுள்ளனர்.

நான்காம் மாடிக்குச் சென்ற தருண், ஜன்னல் கண்ணாடியை  உடைத்து, அங்கிருந்து  கீழே குதித்துள்ளார்.

படுகாயம் அடைந்த தருண் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு , இறந்து போனார்.

கடந்த  மார்ச் மாதம் தருண், மூளைக்கட்டிக்கு அறுவை சிகிச்சை செய்திருந்தார்.

கொரோனா பாதித்த அவரை வேலையில் இருந்து பத்திரிகை நிர்வாகம் நீக்கி விட்டதாகத் தெரிகிறது.

இதனிடையே ’’ தனது உயிருக்கு ஆபத்து உள்ளது’’ என தருண் சொல்லி வந்ததாக அங்குள்ள சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

நன்றாகக் குணம் அடைந்த நிலையில் , தருண் தற்கொலை செய்து கொண்டது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-பா.பாரதி.