குடும்பமே சேர்ந்து பலாத்காரம்..கணவனே உடந்தையாக இருந்த கொடுமை

ராஜஸ்தான் மாநிலம் ஜல்ராபதானில் பால்தா பகுதியைச் சேர்ந்தவர் பிரதான் சிங்.  இவருக்குத் திருமணமாகி சில வருடங்கள் ஆகிறது. ஆனாலும் இவர்களுக்கு இன்னமும் குழந்தை பாக்கியம்  கிட்டவில்லை.  இதற்குக் காரணம் இவரது மனைவி தான் எனக்கூறி அவரை இவர் குடும்பத்தினர் பாடாத பாடு படுத்தி வந்துள்ளனர். இதன் உச்சக்கட்டமாக இவரது மாமனார் பரத் சிங் மற்றும் கணவரின் தம்பி மகேந்திரன் சிங் இருவரும் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இவரது மாமனார் நான்கு முறை அப்பெண்ணைப் பலாத்காரம் செய்துள்ளார்.  கணவரின் தம்பியும் தொடர்ந்து பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். சில சமயங்களில் இருவரின் தாக்குதல்களுக்கும் ஆளாகியுள்ளார் இப்பெண்.

இதுபற்றி கணவரிடம் தெரிவித்தும் அவர் இதனைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.  வெறுத்துப்போன அந்தப்பெண் ஜலாவர் போலீசாரிடம் நேரடியாக வந்து புகார் தந்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை எஸ்பி கோபால் மீனா, “பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமனாரும், கணவரின் சகோதரனும் பல தடவை அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.  இதை வெளியில் யாரிடமாவது சொன்னால் உன்னைக் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டி இருக்கிறார்கள்.  கல்யாணம் ஆகி வந்ததில் இருந்து அந்த பெண் கர்ப்பமாகவில்லை.  தாய்மை அடையாததைக் காரணம் காட்டியே 3 பேரும் சேர்ந்து இக்கொடுமையைச் செய்து வந்துள்ளனர்” என்கிறார்.

இதையடுத்து மாமனார், கணவனின் தம்பி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.  இந்த கொடுமைக்கு உடந்தையாக இருந்த கணவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

– லெட்சுமி பிரியா