டெல்லி: ஆத்ஆத்மி அரசின் மதுபான் கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில், விசாரணைக்கு ஆஜராக மறுத்த கெஜ்ரிவால்,  மத்திய   பாஜக அரசின் தூண்டுதல் காரணமாகவே எனக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக   விமர்சனம் செய்துள்ளார்.

டெல்லியில் ஆட்சி நடத்தி வரும் கெஜ்ரிவால் தலைமையிலான  ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இதன்படி 849 மதுபான கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. புதிய மதுபானக் கொள்கையானது, மது விற்பனை உரிமையாளர்கள் பயனடையும் வகையில் அவர்களுக்கு சாதகமான அம்சங்களை சேர்த்து வரையறை செய்ததாகவும், இதற்காக பிரதிபலனாக பெரும் தொகையை ஆம் ஆத்மி பெற்றதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக  எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.  இது குறித்து எதிர்கட்சிகள் எழுப்பிய புகார் மற்றும் மனு அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்தார்.

இந்த வழக்கில் ஏற்கனவே டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரியில் அமலாக்கத் துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அவரை தொடர்ந்து, கடந்த மாதம் இந்த வழக்கில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கும் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து,  சிபிஐ, அமலாக்கத் துறை  ஆகிய இரு புலனாய்வு அமைப்புகளும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கின் தொடர்ச்சியாக,  டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக  அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘இந்த நிலையில் சம்மனை திரும்பப் பெற வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சம்மன் அனுப்பியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், அமலாக்கத்துறை சம்மன் சட்டவிரோதம், அரசியல் உள்நோக்கம் கொண்டது. மத்திய பாஜக அரசின் தூண்டுதல் காரணமாகவே தனக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது என்றும்,  4 மாநில தேர்தல் பிரச்சாரத்திற்கு தாம் செல்வதை தடுக்கவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆகவே அமலாக்கத்துறை தனக்கு அனுப்பிய நோட்டீசை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தால் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக மாட்டார் என தெரிகிறது. இதனிடையே மத்திய பிரதேசத்தின் சிங்ராலியில் நடக்கும் தேர்தல் பிரச்சாரத்திற்கு பஞ்சாப் முதல்வருடன் செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லி மதுபான கொள்கை ஊழல்: ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை