டெல்லி: தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளா மாநில அரசு, அம்மாநில  ஆளுநர் ஆரிஃப் கானுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது.

சமீப காலமாக ஆளுநர்களுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த விவகாரங்களில் தேசிய கட்சியான பாஜகவும், காங்கிரசும் ஆர்வம் காட்டாத நிலையில், மாநில கட்சிகள், ஆளுநர் வேண்டாம் என போர்க்கொடி தூக்கி வருகின்றன.  தமிழகம், தெலங்கானா, கேரளா மற்றும் டெல்லி உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும்  மாநிலங்களில் ஆளும் அரசுகளுக்கும், ஆளுநர்களுக்கும் இடையே நடக்கும் மோதல் நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வருகிறது.

ஆளுநர்கள் என்பவர்கள் மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்படுகிறார்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை செயல்பட விடாமல் முடக்குகிறார்கள் என்று தென் மாநிலங்களில் ஆளும் பாஜக அல்லாத அரசுகளான திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், டிஆர்எஸ் கட்சி அரசுகள் விமர்சிக்கின்றன.

உச்சகட்டமாக அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநருக்கான பதவியையும் கேள்வி கேட்கும் அளவுக்கு தென் மாநிலங்களில் உள்ள பாஜகஅல்லாத ஆளும் அரசுகளை ஆளுநர்கள் வெறுப்பேற்றி வருகிறார்கள்.

தமிழகத்தில்  திமுக அரசுக்கும், ஆளுநர் என் ரவிக்கு எதிராகவும் கடந்த இரு ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. அதனால், ஆளுநர் ஆர்.என்.ரவி  நீக்கிவிட்டு புதிய ஆளுநரை நியமிக்கும் வகையில் அனைத்து எம்.பி.க்கள் ஆதரவையும் ஆளும் திமுக அரசு தொடங்கியுள்ளது.  மேலும் ஆளுநர் தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க மறுக்கிறார் என உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்துள்ளது.

தெலங்கானாவிலும் ஆளும் டிஆர்எஸ் அரசுக்கு எதிராக ஆளுநர் தமிழிசை  செயல்பட்டு வருகிறார்.  மாநில கல்வித்துறை அமைச்சர் இந்திரா ரெட்டியை அழைத்து, 15 பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி விதிப்படி ஆட்களை நியமிப்பது குறித்து ஆலோசித்தார். கடந்த 3 ஆண்டுகளாகஏன் காலியிடங்களை நிரப்பவில்லை என்றும் தமிழிசை கேள்வி எழுப்பி டிஆர்எஸ் கட்சியுடன் மோதினார். மருத்துவப் பல்கலைக்கழகம் தவிர அனைத்திலும் ஆசிரியர்களை நேரடியாக நியமிக்கும் மசோதா உள்ளிட்ட 8 மசோதாக்களுக்கு ஆளுநர் தமிழிசை ஒப்புதல் தராமல் டிஆர்எஸ் அரசை வெறுப்பேற்றி வருகிறார். இதனால் நாளுக்கு நாள் ஆளுநருக்கும், ஆளும் டிஆர்எஸ் அரசுக்கும் இடையே வார்த்தை மோதல் வலுத்து வருகிறது.

அதுபோல  கேரள மாநிலத்தில் ஆளும் எல்டிஎப் கூட்டணி, ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதன் எதிரொலியாக ஆளுநரை கண்டித்து,  வீட்டுக்குவீட்டு பிரச்சாரம் செய்யும் பணியையும், துண்டுப் பிரசுரங்கள் மூலம் ஆளுநர் குறி்த்த விமர்சனத்தை வைத்து  முதலமைச்சர் பினராயி விஜயன் கட்சி மக்கள் ஆதரவை திரட்டி வருகிறது.

இந்த நிலையில்,  கேரள ஆளுநர் ஆரிஃப் கானுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அம்மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.  இரண்டுக்கும் மேற்பட்ட எட்டு மசோதாக்களுக்கு இடையே நீண்ட நெடுங்காலம் நிலுவையில் உள்ளதால், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை உரிய நேரத்தில் நிறைவேற்ற ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு உத்தரவிடுமாறு கேரள அரசு வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டது.  மாநில அரசின் 8 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆரிஃப் கான் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக மனுவில் புகார் தெரிவிக்கபட்டுள்ளது.