டெல்லி:

ணமோசடி வழக்கு தொடர்பாக தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவ்குமாருக்கு டெல்லி உயர்நீதி மன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.

சட்டவிரோத பணபரிமாற்றம் செய்ததாக குற்றம்சாட்டி, அமலாக்கத் துறையினர் கடந்த மாதம் 3ம் தேதியன்று கர்நாடக காங்கிரஸ் மூத்த  தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவகுமாரை  கைது செய்தது அவர் மீது, போலி கம்பெனிகள் நடத்தி, ரூ.200 கோடிக்கு மேல் ஹவாலா பரிமாற்றங்களை மேற்கொண்டிருக்கிறார் என்று அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.

அதையடுத்து திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.  அவர் ஜாமின் தாக்கல் செய்த மனு, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் நிராகரிக்கப் பட்டது. அதையடுத்து டில்லி உயர்நீதி மன்றத்தில் ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது நடைபெற்ற நீண்ட விசாரணைக்கு பிறகு  கடந்த 17 ந்தேதி விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று டில்லி உயர்நீதி மன்றம், சிவகுமாருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளது. ரூ.25 லட்சம் சொந்த ஜாமினிலும், மனுதாரர் மீது எந்தவொரு கட்டாய நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்றதுடன், விசாரணைக்கு சிவகுமார் ஒத்துழைக்க வேண்டும் என பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையிலும் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டு உள்ளது.

முன்னதாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டி.கே. சிவகுமாரை இன்று காலை , காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி காலையில் திகார் சிறைக்கு வந்து சந்தித்து விட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.