டில்லி

டில்லி உயர்நீதிமன்றம் திகார் சிறையில் என்ன நடக்கிறது எனக் கேள்விகள் எழுப்பி உள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டில்லி நீதிமன்ற வளாகத்தில் ஒரு துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்த விவகாரத்தில் தாதா தில்லு தஜ்பூரியா கோஷ்டிக்குத் தொட ர்பு இருக்கிறது என்பது காவல்துறையின் குற்றச்சாட்டு ஆகும்.  இதையொட்டி தில்லு தஜ்பூரியா பல்வேறு வழக்குகளில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.  கடந்த வார, தில்லு தாஜ்பூரியாவை மற்றொரு தாதா கும்பல், திகார் சிறைக்குள் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தது.

சிறையில் கொல்லப்பட்ட பிரபல ரவுடி தில்லு தஜ்பூரியா தந்தை தரப்பில் டில்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.  மனுவில் அவர் தனது மகன் தில்லு தஜ்பூரியா படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அதன் உண்மை நிலவரம் தெரிவதற்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.  நேற்று மேற்கண்ட மனு டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்மித் சிங் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

நீதிபதி,‘‘சிசிடிவியில் தில்லு தஜ்பூரியா படுகொலை விவகாரத்தில் அனைத்தும் பதிவாகி உள்ள போதும் அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. சிறையில் இருந்த ஒரு கைதி சிறை கம்பியை அறுத்து வெளியில் வந்து கொலை செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதை எவ்விதத்திலும் ஏற்க முடியாது.  திகார் சிறை வளாகத்திற்குள் என்ன தான் நடக்கிறது.  இதுதொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்பது தெளிவாக தெரிவருகிறது என சரமாரியாகக் கேள்வியெழுப்பி உள்ளார்.

மேலும் நீதிபதி, ”தில்லு தஜ்பூரியா படுகொலை விவகாரம் தொடர்பாக திகார் சிறைத்துறை நிர்வாகம் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.  டில்லி காவல்துறை தில்லுவின் குடும்பத்துக்குப் பாதுகாப்பு வழங்குவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும்.  அடுத்த விசாரணையின் போது இந்த விவகாரம் தொடர்பாக திகார் சிறை சூப்பிரண்டு நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.