புதுடெல்லி: குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் பெறாத மாணாக்கர்களை, 5 மற்றும் 8ம் வகுப்புகளில் நிறுத்தி வைப்பதற்கான பரிந்துரையை ஏற்பதென டெல்லி மாநில அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த நிறுத்திவைப்பு திட்டத்தை இந்த கல்வியாண்டிலேயே அமல்படுத்த டெல்லி அரசாங்கம் முடிவுசெய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்மூலம் தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள் இரண்டுமே, சில குறிப்பிட்ட காரணங்களுக்காக மாணாக்கர்களை நிறுத்தி வைக்கலாம்.

டெல்லி மாநில அரசாங்கம் நியமித்த கமிட்டியின் பரிந்துரைப்படி, 5 மற்றும் 8ம் வகுப்புகளில், குறைந்தபட்சம் 40% மதிப்பெண்களை பெறுவதற்கு தவறும் மாணாக்கர்களை நிறுத்தி வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி உரிமைச் சட்டத்தில், 8ம் வகுப்பு வரை மாணாக்கர்கள் யாரையும் ஒரே வகுப்பில் நிறுத்தி வைத்தல்கூடாது என்ற அம்சம் தொடர்பாக திருத்தம் கொண்டுவந்தது மத்திய அரசு.
அதேசமயம், இந்த அம்சம் தொடர்பாக மாநில அரசுகள் முடிவு செய்துகொள்ளலாம் என்றும் மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. பஞ்சாப் மாநில கல்வி வாரியம் மேற்கூறிய வகுப்புகளைச் சேர்ந்த 3000 மாணாக்கர்களை குறைந்தபட்ச தகுதியின்மைக்காக நிறுத்தி வைத்துள்ளது.

டெல்லி அரசாங்கம், கமிட்டியின் பரிந்துரையை ஏற்று, நிறுத்தி வைப்பு என்பதை நீட்டிப்பு என்பதாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.