புதுடெல்லி: டெல்லியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு, தமது வாகனத்தில் ‘ஐ லவ் கெஜ்ரிவால்‘ என்ற போஸ்டரை ஒட்டியதற்காக, ரூ.10,000 அபராதம் விதித்ததை எதிர்த்து பெட்டிஷன் போட்டதையடுத்து, டெல்லி உயர் நீதிமன்றம், செவ்வாய்க்கிழமையன்நு ஆத் ஆத்மி அரசு, காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையத்தின் பதிலைக் கோரியுள்ளது.
ராஜேஷ் என்ற அந்த ஓட்டுநருக்கு ஜனவரி 15 அன்று அபராதம் விதிக்கப்பட்டதாக இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அந்த போஸ்டரை வாகனத்தில் வைக்குமாறு யாரும் தன்னிடம் கூறவில்லை என்றும் தானாக விருப்பப்பட்டு தான் அவ்வாறு செய்ததாகவும் தெரிவித்தார்.
கலிண்டி குன்ச் லிருந்து அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தபோது, போக்குவரத்து போலீசார் தனக்கு அபராதம் விதித்ததாக ராஜேஷ் தெரிவித்தார். மேலும், அவர், காவல்துறை தனது அடிப்படை உரிமையை மீறியதாகவும், அபராதத்தை ஒதுக்கி வைக்க நீதிமன்றத்தை வலியுறுத்தியதாகவும் கூறினார்.
அரசையும் காவல்துறையையும் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர், ராஜேஷுக்கு ஏன் அபராதம் விதிக்கப்பட்டது என்று விசாரிப்பதற்காக நீதிமன்றத்தில் சிறிது கால அவகாசம் கோரியதுடன், இந்த விவகாரத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்வதாக உறுதியளித்தார். தேர்தல் ஆணையத்தின் ஆலோசகர், ஆட்டோ ஓட்டுநர் மாதிரி நடத்தை விதிகளை மீறியதாகக் கூறப்படுவதால் அபராதம் விதிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தார்.
மனுதாரரின் வழக்கறிஞர், அந்த போஸ்டர் ஒரு அரசியல் விளம்பரம் அல்ல என்று வாதிட்டார். மேலும், அது ஓட்டுநர் ராஜேஷின் சொந்த செலவில் வைக்கப்பட்டது என்றும் சுட்டிக்காட்டினார். இந்த வழக்கு மார்ச் 3ம் தேதி விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
இதற்கிடையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக ஏழைகளைக் குறிவைப்பதாகவும், அவர்களுக்குத் தீங்கிழைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.