டில்லி

டில்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமியா மாணவர்கள் பேரணியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்

நேற்று குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் பேரணி ஒன்றை நடத்தினர்.  அப்போது இந்த கூட்டத்தில் இடையில் புகுந்த மர்ம நபர் மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.  இதில் ஒரு மாணவர் காயம் அடைந்தார்.

இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு எதிராக நேற்று மாலை கடும் போராட்டம் நடைபெற்றது.  இதில் ஏராளமான மாணவர்களும் பொதுமக்களும் கலந்துக் கொண்டனர்.   இந்த பகுதியில் காவல்துறையினர் வைத்திருந்த தடுப்புக்களையும் மீறி மாணவர்களும் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்த பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு போராட்டத்தை அமைதிப் படுத்தினர்.

டில்லி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நேரத்தில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டை முன்னிட்டு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் பாஜகவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.   ஏற்கனவே பாஜகவின் இணை அமைச்சர் அனுராக் தாக்குர் போராட்டத்தில் ஈடுபடுவோரைச் சுட்டுத் தள்ள வேண்டும் எனப் பேசியதால் தேர்தல் ஆணையம் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.  இதைக் குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சி டிவிட்டரில் பதிவு இட்டிருந்தது.

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டில்லி முதல்வருமான அர்விந்த் கெஜ்ரிவால் இந்த துப்பாக்கிச் சூடு குறித்து தனது டிவிட்டரில், “டில்லியில் என்னதான் நடக்கிறது.  பாஜக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது.  மத்திய அரசு சட்டம் ஒழுங்கை கவனிக்க வேண்டும்” எனப் பதிந்துள்ளார்.  இந்த சம்பவம் தேர்தலில் பாஜகவுக்குப் பின்னடைவை அளிக்கும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் டில்லி தேர்தல் பிரசாரத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா. “இன்று ஜாமியா பகுதியில் நடந்த துப்பாக்கி சூடு குறித்து நான் காவல்துறை ஆணையரிடம் பேசினேன்.  அத்துடன் குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுதி படக் கூறி உள்ளேன்.  மத்திய அரசு இத்தகைய குற்றங்களைச் சகிக்காது.  குற்றவாளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.