தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில், தஞ்சாவூர் மாவட்டம், தாராசுரத்தில் அமைந்துள்ளது.

ஐராவதேஸ்வரர் கோவில் வரலாறு: தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு அருகில் தாராசுரம் என்னும் ஊரில் உள்ளது. இக்கோவில் இரண்டாம் இராஜராஜனால் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோவில்களில் இக்கோவிலும் ஒன்றாகும்.

புராண ரீதியாக இந்திரனது பட்டத்து யானையாகிய ஐராவதம், தலைக்கனம் ஏறி துர்வாச முனிவரிடம் அலட்சியமாக நடந்து கொண்டது, துர்வாச முனிவரோ கோபத்துக்கும், சாபத்துக்கும் பெயர் பெற்றவர்; அவர் ஐராவதத்தின் அகங்காரத்தை அறிந்து, சாபம் கொடுத்து விட்டார். சாபம் பெற்ற ஐராவதம் தனது பெருமையை இழந்து, நிறம் இழந்து காட்டானையாக அலைய வேண்டி வந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் தாராசுரம் எம்பெருமானை அன்போடு வழிபட்டு இறைவன் அருளாலும், கருணையினாலும் பழைய உருவை எய்தி, தனது அகங்காரத்தை விட்டொழித்தது. இவ்வாறு ஐராவதம் பேறு பெறுவதற்கு உதவிய இறைவன், ஐராவதேஸ்வரர் என்றே போற்றப்படலானார் என்கிறது புராணம்.

ஒரு சமயம் எமதர்மன், முனிவர்களின் கோபத்துக்கு ஆளாகி சாபத்தையும் ஏற்க வேண்டி வந்தது. அச்சாபம் அவனின் உடலைத் தகிக்க, அந்த வெப்பத்தைத் தாள மாட்டாதவனாய் எங்கெங்கெல்லாமோ அலைந்து சென்று பார்த்தும் பலனில்லாமல் போகவே, இறுதியாக தாராசுரம் வந்தான். ஐராவதேஸ்வரர் திரிசூலத்தால் உண்டாக்கியிருந்த தீர்த்தத்தின் சிறப்பை உணர்ந்தான். உடன் அதில் இறங்கி நீராடினான். வெப்பமாகிய வேதனையிலிருந்து மீண்டான் என்பதும் ஒரு புராண வரலாறு. எமதர்மன் சாபம் பெற்றதால் கொண்ட உடல் எரிச்சல் தீர இங்குள்ள குளத்தில் நீராடி விமோசனம் பெற்றதால், அக்குளம் “எமதீர்த்தம்” என அழைக்கப்படுகிற்து.

மரணமற்ற பெருவாழ்வு வாழவும், தேவர்களை வெல்லவும் தாரன் என்ற அசுரன் இத்தலத்து இறைவனை பூசித்து, தவம் இருந்து தான் விரும்பிய அருளைப் பெற்றதால் இத்தலம் உள்ள இடம் தாராசுரம் என்றானது என்றும் கூறுகிறது.

ஐராவதேஸ்வரர் கோவிலின் வலப்புறத்தில் வெளியே தெய்வநாயகி அம்மனுக்குத் தனியாக கோவில் அமைந்துள்ளது. நுழைவாயிலில் நந்தியினருகே அமையப்பெற்றிருக்கும் பலி பீடத்தின் படிகள் இசையொலி எழுப்பும் படிகளாக அமைக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு கனங்களிலிருக்கும் இந்த தூண்கள், தட்டும்போது சரிகமபதநீ என்ற சுரங்களைக் கொடுக்கின்றன.

ராஜகம்பீரன் திருமண்டபம் என்று அழைக்கப்படும் மகா மண்டபம் யானைகளாலும் குதிரைகளாலும் இழுத்துச் செல்லப்படுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்திற்கு ஏறிச் செல்லும் படியில் யானைகள் ஒரு பக்கத்திலும் குதிரைகள் மற்றொரு பக்கத்திலும் தேரை இழுத்துச் செல்வதுபோல் உள்ள சிற்பத்தின் சக்கரம், இன்றுவரை இந்திய கலையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இதில் உள்ள சக்கரம் உள்ளிட்ட பல சிற்பங்கள் அந்நியர் படையெடுப்பால் சிதைக்கப்பட்டு தொல்லியல் துறையால் பிற்காலத்தில் திரும்ப சேர்க்கப்பட்டது.

சாபம் விமோசனம் கிடைத்து, சகல ஐஸ்வர்யங்களும் செழிக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.