சென்னை: தமிழ்நாட்டில் மொத்தமுள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டு மட்டும்  1லட்சத்து 2ஆயிரத்து 224 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக கல்லூரி கல்வி இயக்கம் தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில்  163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.  இங்கு இளநிலை படிப்புகளுக்காக  1 லட்சத்து 11 ஆயிரத்து 300  இடங்கள் உள்ளன. இதில், நடப்பாண்டு  இதுவரை (ஜூலை 31வரை)  1 லட்சத்து 2 ஆயிரத்து 224 மாணவர்கள்  சேர்க்கை நடைபெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகம் இருக்கும் என தமிழ்நாடு அரசு,  20%  கூடுதல் மாணவர்களை சேர்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.  இதையடுத்து மாநிலம் முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1லட்சத்து 2 ஆயிரத்து 224 மாணவர்கள் சேர்ந்து உள்ளனர். அதாவது 45 ஆயிரத்து 965 மாணவர்களும் 56 ஆயிரத்து 259 மாணவிகளும் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.  அதேபோல் அரசு பள்ளியில் படித்த 27 ஆயிரத்து 775 மாணவர்கள் புதுமை பெண் திட்டத்தின் மூலம் நிதி உதவி பெறவும் உள்ளனர்.

இதுதொடர்பாக கல்லூரி கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ள தகவலில், “தமிழ்நாட்டில் உள்ள 163 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023 – 2024 ஆம் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்ந்த பின்னர் தேவைப்படும் கல்லூரிகளுக்கு 20 சதவீதம் கூடுதல் இடம் வழங்கியது உட்பட ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 300 மாணவர்கள் சேருவதற்கு அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 224 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 49 ஆயிரத்து 965 மாணவர்களும், 56 ஆயிரத்து 259 மாணவிகளும் அடங்குவர். அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளின் புதுமைப்பெண் திட்டத்தில் நிதி உதவி பெறுவதற்கு தகுதி பெற்ற 27 ஆயிரத்து 775 மாணவிகளும் சேர்க்கப்பட்டு உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நடப்பாண்டில் கல்லூரிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் 9 ஆயிரத்து 76 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படாமல் உள்ளனர். கடந்த ஆண்டுகளை விட நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை ஒதுக்கப்பட்ட இடங்களில் அதிக அளவில் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.