சென்னை

ந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்குவதில் பாரபட்சமாக நடப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளது.

இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக துணை செயலர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் ஏற்கனவே நடந்து முடிந்த தேர்தலில் ஒதுக்கீடு பெற்ற சின்னங்களை மீண்டும் ஒதுக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டிருந்தன. 

தேர்தல் ஆணையம் இந்த முறையீடுகள் மீது பாரபட்சம் காட்டாது, சார்பற்ற நடுநிலையோடு நடந்து கொள்ளவில்லை என்பது பெரும் கவலை அளிக்கிறது.  இந்தியா கூட்டணியில் அங்கம் பெற்றுள்ள கட்சிகளின் கோரிக்கைகளை நிராகரித்து விட்டு, பா.ஜ.க ஆதரவுக் கட்சிகளின் கோரிக்கைகளைத் தேர்தல் ஆணையம் அப்படி யே ஏற்றுக் கொண்டிருக்கிறது.

தேர்தல் ஆணையத்தின் இந்த நியாயமற்ற நடைமுறைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையான எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.  

தேர்தல் களம் என்பது போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சிகள் அனைத்துக்கும் சம தளமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டிய தேர்தல் ஆணையம் சந்தேகத்தின் நிழல் படிந்து விடாமல் எச்சரிக்கையுடன் செயல்பட்டு, தேர்தல் நடைமுறைகளும் வாக்குப்பதிவும் நியாயமான, சுதந்திரமான முறையில் அமைவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது. சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக விரிவான புகார் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

என்று தெரிவித்துள்ளார்.