பள்ளிக்கரணை ராம்சார் தள எல்லைக்குள் உள்ள வீடுகள் மற்றும் மனைகளை வாங்கவோ, விற்கவோ முடியாது என்ற தகவல்கள் சமூக வலைதளங்களிலும், உள்ளூர் அளவிலும் பரவி வரும் நிலையில், அவை அனைத்தும் வதந்தி என வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.
சென்னையின் பள்ளிக்கரணை சதுப்புநிலம், 2022-ஆம் ஆண்டு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலமாக (Ramsar Site) அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த ராம்சார் தளத்தின் அதிகாரப்பூர்வ எல்லையை வரையறுக்கும் பணிகளை வனத்துறை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில், பெரும்பாக்கத்தில் செயல்பட்ட ஒரு கட்டுமான நிறுவனம் தொடர்பான வழக்கை விசாரித்த தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT), பள்ளிக்கரணை சதுப்புநிலத்தைச் சுற்றியுள்ள ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் புதிய கட்டுமானத் திட்டங்களுக்கு அனுமதி வழங்க தற்காலிக தடை விதித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து சில கட்டுமான நிறுவனங்கள் நீதிமன்றத்தை அணுகிய நிலையில், விவகாரம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பள்ளிக்கரணை, வேளச்சேரி, மடிப்பாக்கம், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, ஒக்கியம் துரைப்பாக்கம், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில், “ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் உள்ள வீடுகள் மற்றும் மனைகளை வாங்கவோ, விற்கவோ முடியாது” என்ற தகவல் பரவியதால் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சில ரியல் எஸ்டேட் தரகர்கள் இதுபோன்ற தகவல்களை பரப்பி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ராம்சார் தளத்துக்கான இறுதி எல்லை வரையறை செய்யப்படும் வரை, ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் புதிய கட்டடங்களுக்கு மட்டும் தற்காலிகமாக அனுமதி வழங்கப்படவில்லை. ஏற்கனவே கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் மனைகளை வாங்குவதற்கும், விற்பதற்கும் எந்தவித தடையும் இல்லை” என்று தெரிவித்தார்.
மேலும், தற்போது குறிப்பிடப்படும் ஒரு கிலோமீட்டர் தற்காலிக வரம்பு, இறுதி எல்லை வரையறைக்குப் பிறகு 70 முதல் 100 மீட்டர் வரை குறைய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.
எல்லை வரையறை பணிகள் நிறைவடைந்த பின்னரும், பட்டா நில உரிமையாளர்களின் உரிமைகள் பாதிக்கப்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், புறம்போக்கு நிலங்கள் தொடர்பான விவகாரங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும் என்றும் வனத்துறை விளக்கியுள்ளது.
எனவே, பள்ளிக்கரணை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வீடு அல்லது மனை வாங்கியவர்கள் அச்சமடைய வேண்டாம் என்றும், ஆதாரமற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் வனத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.