சிம்லா: கேரளா சம்பவத்தை தொடர்ந்து தற்போது இமாச்சல பிரதேசத்திலும், சினைப்பசுவுக்கு உணவுடன் வெடிமருந்து கொடுத்ததில், அந்த பசு படுகாயமடைந்தது.

கேரளாவில் யானைக்கு அன்னாசி பழத்தில் வெடிமருந்து கொடுத்து கர்ப்பமான யானை இறந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன் தாக்கம் குறைவதற்கு முன்பாக, தற்போது இமாச்சல பிரதேசத்திலும் இது போல ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பிலாஸ்பூர் மாவட்டத்தின் ஜன்துட்டா பகுதியில், சினைப் பசுவுக்கு, கோதுமை மாவு உருண்டைக்குள், வெடி வைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

அதனை உண்ட பசுக்கு வாய் சிதைந்து படுகாயம் ஏற்பட்டது. விளை நிலங்களை சேதப்படுத்தியதால் அதன் உரிமையாளர்கள் இப்படி ஒரு காரியத்தை  கொல்ல முயன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இச்சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பசுவின் உரிமையாளரான குர்தயால் சிங், இந்த சம்பவத்துக்கு அண்டை வீட்டார் தான் காரணம் என்று குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் தேவகர் சர்மா கூறி இருப்பதாவது: விலங்குகள் மீதான வன்கொடுமை சட்டத்தின் பிரிவு 286 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கில் பசுவின் உரிமையாளர் மற்றும் பிற நபர்களால் பெயரிடப்பட்ட முக்கிய குற்றவாளி குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.