காஷ்மீரை இனி கார்பரேட் முதலாளிகள் ஆக்கிரமித்துவிடுவார்கள்: திருச்சி சிவா வேதனை

Must read

காஷ்மீரை இனி கார்ப்பரேட் முதலாளிகள், வெளிநாட்டு முதலாளிகள் மற்றும் பெரும் பணக்காரர்கள் ஆக்கிரமித்து விடுவார்கள் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் நேற்று காஷ்மீர் மாநிலத்திற்கு அந்தஸ்த்து வழங்கும் 370 பிரிவை ரத்து செய்யும் தீர்மானம் முன்மொழியப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக டில்லியில் உள்ள தனியார் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள திருச்சி சிவா, “மாநிலங்களவையில் காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரிக்கும் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. 370-வது பிரிவின்படி காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்க சட்டம் உள்ளது. ஆனால் முறைப்படி மத்திய அரசு அதனை செய்யவில்லை. அந்த மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி தான் இதை நிறைவேற்ற முடியும்.

ஆனால் அங்கு இப்போது சட்டசபை ஆட்சியில்லை. குடியரசு தலைவர் அதிகாரத்தை பயன்படுத்தியதுடன் அரசியல் அதிகாரத்தையும் தவறாக பயன்படுத்தியுள்ளனர். இன்று இப்படி செய்தவர்கள் எதிர்காலத்தில் மற்ற மாநிலங்களங்களையும் யூனியன் பிரதேசமாக பிரிக்க மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம் என்று மாநிலங்களவையில் கேட்டேன்.

மேலும் இதற்கு ஏன் இந்த அவசரம்? இப்போது என்ன அவசியம்? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? மக்கள் கருத்தை கேட்டீர்களா? அதில் தொடர்புடையவர்கள் கருத்தை கேட்டீர்களா? பரபரப்பாக உடனே செய்ய என்ன காரணம் என்றும் கேள்வி எழுப்பினேன். அதற்கு மற்ற மாநிலங்களை அவ்வாறு பிரிக்க மாட்டோம் என்று பதில் அளித்தனர்.

இப்போது எடுத்துள்ள நடவடிக்கையால் காஷ்மிரில் யார் வேண்டுமானாலும் குடியேறலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் பூமியின் சொர்க்கம். இனி கார்ப்பரேட் முதலாளிகள் வெளிநாட்டு முதலாளிகள், பெரும் பணக்காரர்கள் காஷ்மீரை ஆக்கிரமித்து விடுவார்கள் என்று பேசி எங்கள் எதிர்ப்பை நேற்று மாநிலங்களவையில் தெரிவித்தோம்.

இன்றும் கூட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து இந்த தவறான நடவடிக்கை எதிர்த்து குரல் கொடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

More articles

Latest article