லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தில், கொரோனா தடுப்பு மருந்தை, 2 கட்டங்களும் எடுத்துக்கொண்ட சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர்.டி.எஸ்.நெகி மற்றும் லக்னோ மேதாந்தா மருத்துவமனை இயக்குநர் டாக்டர்.ராகேஷ் கபூர் ஆகிய இருவருக்கும், கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஆனால், இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த இருவருமே, கொரோனா தடுப்பு மருந்தை, இரண்டு கட்டங்களாக எடுத்துக்கொண்டவர்கள் என்பதுதான்.

இதில், டாக்டர்.நெகி, கடந்த ஜனவரி 16ம் தேதி முதல்கட்ட டோஸையும், கடந்த பிப்ரவரி 15ம் தேதி, இரண்டாவது கட்ட டோஸையும் எடுத்துக்கொண்டார்.

மேலும், லோக் பந்து மருத்துவமனையைச் சேர்ந்த குழந்தை மேம்பாட்டு திட்ட இயக்குநர் டாக்டர்.காமினி ஸ்ரீவஸ்தவா மற்றும் டாக்டர்.சஞ்சீவ் கத்வானி ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களும், இரண்டு கட்டமாக கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தற்போது தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில், தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளது. இரண்டு கட்டமாக டோஸ் எடுத்துக்கொண்டவர்களையும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.