புதுடெல்லி: மராட்டியம், ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொள்வதற்குரிய வயது வரம்பை குறைக்குமாறு அல்லது நீக்குமாறு பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

சமீப நாட்களில், மேற்கண்ட மூன்று மாநிலங்களிலும் கொரோனா பரவல் பெரியளவில் அதிகரித்து வருகிறது. எனவே, இத்தகைய கோரிக்கையை இம்மாநில முதல்வர்கள் எழுப்பியுள்ளனர்.

மராட்டிய முதல்வர், 25 வயதுக்கு மேற்பட்டிருந்தாலே, கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளலாம் என்ற விதிமுறையைக் கொணர வேண்டுமென்றுள்ளார். ஏனெனில், அத்தகைய இளம் வயதினர், தங்கள் குடும்பத்தைக் காப்பதற்காக வெளியில் சென்று பொருளீட்ட வேண்டியுள்ளது. எனவே, அவர்களைப் பாதுகாப்பதற்கு தடுப்பு மருந்து செலுத்த வேண்டியது அவசியம் என்றுள்ளார்.

ராஜஸ்தான் முதல்வர் கெலாட், அனைத்து வயதினருக்கும், கொரோனா தடுப்பு மருந்தை செலுத்தும் வகையில் விதிகள் திருத்தப்பட வேண்டும் என்றுள்ளார்.

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், மருத்துவ காரணங்களுக்காக, தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ள முடியாதவர்கள் தவிர, மற்ற அனைவரும் அதை எடுத்துக்கொள்ளும் வகையில், விதிமுறைகளை மாற்றியமைக்க வேண்டுமென மத்திய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.