டெல்லி: தடுப்பூசி போடாதவர்களாலேயே கொரோனா வைரஸ் உருமாற காரணம் என உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் தடுப்பூசி பெரும் பங்காற்றி வருகிறது. இதனால் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 181 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 81.9 கோடி பேருக்கு இரு டோஸ் தடுப்பூசிகளும், 59.04 சதவிகிதம் பேருக்கு இரு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு உள்ளது என மத்தியஅரசு அறிவித்து உள்ளது.

இதற்கிடையில் தடுப்பூசி கட்டாயம் என பல மாநில அரசுகள் அறிவித்து இருப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது இந்தவழக்கில் மாநில அரசுகள் சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இன்று தமிழகஅரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில்,  மக்கள் நலன் கருதியே தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்தி அச்சு, எலக்ட்ரானிக் ஊடகம், சமூக வலைதளம் என எல்லாவற்றிலுமே விளம்பரங்கள் செய்யப்படுகிறது. இதை செயல்படுத்தவே சுகாதார துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடாதவர்களாலேயே கொரோனா வைரஸ் உருமாற காரணம் என நிபுணர்கள  தெரிவித்துள்ளதாகவும், மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி 100% தடுப்பூசி போடப்படுவது உறுதி செய்யப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டது.