பனாஜி: மும்பையிலிருந்து கோவா சென்ற ‘கார்டெலியா குரூஸ்’  சொகுசு கப்பலில் சுமார் 2ஆயிரம் பேர் பயணித்த நிலையில், அவர்களில்  66 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக, அந்த கப்பலில் பயணம் செய்த 2ஆயிரம் பேரும் கப்பலை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இந்த கப்பல் மீண்டும் மும்பைக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது கார்டெலியாக சொகுசு கப்பல். இந்த கப்பலில் நடைபெற்ற பார்ட்டியில் கலந்து கொண்ட இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன்  ஆர்யன் கான் போதை மருந்து பயன்டுத்தியதாக புகார் எழுந்து, கைது செய்யப்பட்ட நிகழ்வு அனைவரும் அறிந்ததே.

தற்போதும் அதே சொகுசு கப்பல் மீண்டும் சிக்கலில் மாட்டியுள்ளது. மும்பையில் இருந்து கோவா சென்ற கார்டெலியா சொகுசு கப்பலில் புத்தாண்டை கொண்டாட ஏராளமானோர் பயணித்தனர்.  பயணிகளில் சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்டது.  இதையடுத்து, அந்த கப்பலில் பயணித்த  சுமார் 2,000 பேருக்கும்  கொரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. அதன் காரணமாக சொகுசு கப்பல் கோவை துறைமுகம் அருகே நடுக்கடலில் நிறுத்தப்பட்டது. அங்கு பாதுகாப்பு கவச உடையில்  சென்ற  மருத்துவக் குழுவினர், பயணிகள் மற்றும் கப்பல் ஊழியர்கள் என சுமார்  2000 பேருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்தனர். அதன்முடிவுகள் நேற்று மாலை வெளியானது. அதில், 66 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக அரசு அறிவிக்கும்வரை  யாரும் கப்பலில் இருந்து இறங்கக் கூடாது என எச்சரிக்கப்பட்டு உள்ளது. மற்ற பயணிகளும் கப்பலி லேயே தனிமைப்படுத்தபடுவார்களா என்பதுகுறித்து, மாநிலஅரசு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து முடிவு செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கோவா சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானே நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘கார்டெலியா கப்பலில் இருந்து 2,000 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 66 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பயணிகளை கப்பலில் இருந்து இறங்க அனுமதிப்பது குறித்து அதிகாரிகள் முடிவு செய்வார்கள்’ என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், காடெலியா குரூஸ் கப்பலை மீண்டும் மும்பே திரும்பிச்செல்லும்படி கோவா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் கோவாவில் இறக்க வேண்டிய பல பயணிகள்  கடுமையாக பாதிக்கப்பட்டுளள்னர்