சென்னை: தொடர் மழை, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு பேன்ற காரணங்களால் தமிழ்நாட்டில் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் கடும் விலை உயர்ந்துள்ளது.  சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை டபுள் மடங்கு விலை அதிகரித்துள்ளது.

கச்சா எண்ணை விலை உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. சமையல் எரி வாயு 900ஐ தாண்டிய ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலைகளும் லிட்டர் ரூ.100ஐ கடந்துள்ளது. இதனால், வாகனச் செலவுகளும் அதிகரித்துள்ளன. சாமானிய மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது

இதற்கிடையில் தமிழகம் உள்பட  அண்டை மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, காய்கறிகள் அழுகி பெரும் சேதங்களை ஏற்படுத்தி உள்ளதால், rந்தைகளுக்கு விற்பனைக்காக வரும் காய்கறி வரத்தும் குறைந்துள்ளது. இதனால் அதன் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் ரூ.40-க்கு விற்ற ஒரு கிலோ அவரைக்காய் தற்போது ரூ.60-க்கு விற்பனை ஆகிறது. ரூ.55 வரை விற்பனையான இஞ்சி ரூ.70-க்கும், தக்காளி விலை ரூ.10 அதிகரித்து ரூ.50-க்கும் விற்பனை ஆகிறது. அதேபோல பீன்ஸ், கத்தரிக்காய், வெண்டைக்காய், பீர்க்கங்காய், முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறி விலை கடந்த வாரத்தை காட்டிலும் ரூ.10 உயர்ந்திருக்கிறது.

கோயம்பேடு மார்க்கெட்டை காட்டிலும் மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் காய்கறி விலை 30 முதல் 40 சதவீதம் கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது, மேலும் பருப்பு எண்ணை உள்பட மளிகை பொருட்களும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.