ஜெய்ப்பூர்

நேற்று காங்கிரஸ் கட்சி ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

அடுத்த மாதம் (நவம்பர்) 25 ஆம் தேதி 200 இடங்கள் கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் மற்றும் மத்தியில் ஆளும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

நேற்று இந்த தேர்தலுக்கான, 33 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை ஆளும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.  பட்டியலில் முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இதில் அசோக் கெலாட் சர்தார்புரா தொகுதியிலும், சச்சின் பைலட் டோங் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு சச்சின் பைலட்டுடன் இணைந்து கெலாட்டுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய 3 தலைவர்களுக்கும் இந்த வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. மேலும் 9 பெண் வேட்பாளர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

தற்போதைய 5 அமைச்சர்கள், தற்போதைய 28 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன், கடந்த தேர்தலில் வென்ற ஒரு சுயேச்சை வேட்பாளருக்கும் காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது.

பெரும்பான்மையான இடங்களுக்கான வேட்பாளர் விவரங்களைக் காங்கிரஸ் இன்னும் அறிவிக்கவில்லை. எனவே காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு இன்று  கூடி, மேலும் பல தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்யும் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.