ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கான அரசியல் பின்னணி குறித்து நாடு முழுவதும் மார்ச் 29 ம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற உள்ளது.

மோடி குறித்து அவதூறாக பேசியதாக சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.

இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் வழங்கியதோடு ஜாமீனும் வழங்கி தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பு வெளியான 24 மணி நேரத்திற்குள் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளை மேற்கோள் காட்டி ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

தகுதியுள்ள எம்.பி. ஒருவரை தகுதி நீக்கம் செய்ததை அடுத்து நீக்கப்பட்ட தகுதியான எம்.பி. என்று தனது சமூகவலைத்தள சுயவிவரத்தை மாற்றியுள்ளார் ராகுல் காந்தி.

அதேவேளையில், காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று நாடு முழுவதும் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரியங்கா காந்தி, பிரதமர் மோடியை கோழை என்று விமர்சித்தார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து இன்று அவைக்கு வந்திருந்தனர்.

இந்த தொடர் போராட்டத்தின் அடுத்த கட்டமாக வரும் புதன் கிழமை (மார்ச் 29) அன்று நாடு முழுவதும் அனைத்து மாநில தலைநகரிலும் காங்கிரஸ் கட்சியின் செய்தியாளர் கூட்டம் நடைபெறுகிறது.

சென்னையில் நடைபெற உள்ள செய்தியாளர் சந்திப்பில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் முகுல் வாஸ்னிக் கலந்து கொண்டு ராகுல் காந்தி பதவி பறிப்பு குறித்த காரணங்களை விளக்க இருக்கிறார்.