டில்லி :

லைநகர் டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், காங்கிரஸ் தொண்டர்களை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சந்திக்க இருக்கிறார்.

காலை 9.30 மணிக்கு முதல் பகல் 11 மணி வரை தொண்டர்களை சந்தித்து ராகுல் காந்தி பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை அகில இந்திய காங்கிரஸ் தலைமை செய்துள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல்காந்தி, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். அதற்கு உத்வேகம் கொடுக்கும் வகையில், காங்கிரஸ் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சந்திக்க இருக்கிறார்.

சமீப காலமாக நாடு முழுவதும் ராகுல்காந்தியின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. நடைபெற்று முடிந்த குஜராத் சட்ட மன்ற தேர்தலில் பாஜகவுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தார்.

ராகுல்காந்தியின் எளிமையான பழகும் தன்மை, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுடனான அவரது சந்திப்பு நாடு முழுவதும் உள்ள  மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில்,  காங்கிரஸ் கட்சியை மேலும்  பலப்படுத்த ராகுல் காந்தி பல புதிய முயற்சிகளை எடுத்துவருகிறார். அதன் ஒரு பகுதியாக வாரம் ஒருமுறை டில்லியில் உள்ள தனது இல்லத்தில் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டு உள்ளார்.

அதுபோல, டில்லியில் இல்லாத நாட்களில்,  தான் எங்கு இருந்தாலும், அங்குள்ள தொண்டர்களை சந்திக்கவும் ராகுல் திட்டமிட்டு உள்ளார்.

ஒவ்வொரு வாரமும், செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் கட்சி நிர்வாகிகளையும், சனிக்கிழமைகளில் தொண்டர்களையும் சந்திக்க  ராகுல் முடிவு செய்துள்ளார். இந்த சந்திப்பு நிகழ்ச்சிக்கு ‘ஜனதா தர்பார்’ என்று பெயரிடப்பட்டு உள்ளது.

இதன்படி நாளை முதல் ஜனதா தர்பார் நிகழ்ச்சி தொடங்குகிறது. நாளை காலை 9.30 மணிக்கு முதல் பகல் 11 மணி வரை, காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில்  தொண்டர்களை சந்தித்து ராகுல் காந்தி பேசுகிறார்.

அடுத்த ஆண்டு,  நாடு முழுவதும் நடைபெற்ற உள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இந்த ஆண்டு வட மாநிலங்களில் நடைபெற்ற உள்ள சட்டமன்ற தேர்தல்களை மனதில் வைத்து, ராகுல்காந்தி இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருப்பதாக கூறப்படுகிறது.