டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 34வது நினைவு நாளையொட்டி, டெல்லியில் உள்ள வீர் பூமியில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே மல்லிகார்ஜுன கார்கே உள்பட பலர் அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 34 நினைவு நாள் இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினரால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அவரது நினைவு நாளையொட்டி டெல்லி வீர்பூமியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் ராகுல் காந்தி, கார்கே ஆகியோர் மரியாதை செலுத்தினர். சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் வாழப்பாடி ராமசுகந்தன் மரியாதை செலுத்தினார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு, டெல்லி வீர் பூமியில் உள்ள அவரது நினைவிடத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
இதுகுறித்து ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “அப்பா, ஒவ்வொரு அடியிலும் உங்களது நினைவுகள் என்னை வழிநடத்துகின்றன. உங்கள் நிறைவேறாத கனவுகளை நினைவாக்குவதே எனது தீர்மானம். நான் நிச்சயமாக அவற்றை நிறைவேற்றுவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் சிறந்த மகனான ராஜீவ் காந்தி, நாட்டிலுள்ள பல லட்சக்கணக்கானோரின் நம்பிக்கையைத் தூண்டினார். 21 ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு இந்தியாவை தயார்படுத்துவதில் அவரின் தொலைநோக்குப் பார்வை முக்கிய பங்கு வகித்தது. ஓட்டுப் போடும் வயதை 18 ஆகக் குறைத்தல், பஞ்சாயத்து ராஜ்ஜை வலுப்படுத்துதல், தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப புரட்சி ஆகியவற்றில் முக்கிய பங்குவகித்தார். முன்னாள் பிரதமர் பாரத ரத்னா ராஜீவ் காந்தியின் தியாக நாளில் அவருக்கு எங்கள் அஞ்சலி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Photo and Video: Credit ANI
‘சமாதான பிரியர்’ ராஜீவ் காந்தியின் 34வது நினைவு தினம் இன்று…