சென்னை: பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளைத்துணி கட்டிக்கொடு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனின் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையில் உள்ள குற்றவாளிகளில் ஒருவரான  பேரறிவாளiன உச்சநீதிமன்றம் நேற்று விடுதலை செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது. இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி போராட்டங்களை நடத்தி வருகின்றது. ஆனால் மற்ற கட்சிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளன. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் தோழமை கட்சியான திமுக, பேரறிவாளன் விடுதலைக்கு நாங்கள்தான் காரணம் என்று மார்தட்டிக் கொள்கிறது.   தமிழக முதல்வர் ஸ்டாலின், “முப்பத்தி இரண்டு ஆண்டு கால வாழ்வை சிறைக் கம்பிகளுக்கு இடையே தொலைத்த அந்த இளைஞர் இன்று விடுதலைக் காற்றை சுவாசிக்க இருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகளும், வரவேற்பும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பேரறிவாளன் விடுதலை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என தமிர்நாடு  காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி  அறிவித்தார். அதன்படி, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம் என்று கூறியதுடன்,  பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளதற்கு, நம்முடைய மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில், காங்கிரஸ் கட்சியினர் அவரவர் பகுதியில் முக்கியமான இடத்தில் வெள்ளைத் துணியால் வாயை கட்டிக் கொண்டு ‘வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது’ என்று எழுதிய பதாகையை கையில் பிடித்துக் கொண்டு அறப்போராட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதன்படி, இன்று காலை தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. கோவை காங்கிரஸ் கமிட்டி சார்பில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாயில் வெள்ளை துணி கட்டி சாலையில் அமர்ந்து காங்கிரஸார் அமைதிப் போராட்டம் நடத்தினர்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சிதம்பரத்தில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்.